Thursday, July 24, 2014

இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைப் பேரவை நடத்தும் விசாரணையை விஞ்சும் வகையில் எமது குழுவின் விசாரணைகள் அமையும்: மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம!

Thursday, July 24, 2014
இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைப் பேரவை நடத்தும் விசாரணையை விஞ்சும் வகையில் எமது குழுவின் விசாரணைகள் அமையும். இவ்வாறு காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவித்தார்.
 
காணாமல் போனோர் தொடர்பாக விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையானது யுத்த காலத்தில் சர்வதேச மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதா என்பதனை விசாரிக்கும் வகையில் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் விரிவுபடுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் கொழும்பு தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேகச் செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
 
எமது குழு ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் விசாரணையை விட சுயாதீனமானதும் நம்பகத்தன்மை வாய்ந்ததுமான விசாரணையை எமது நாட்டில் உள்ளக ரீதியில் நடத்தி அறிக்கையை வெளியிடும். இது விரிவுபட்டதாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
இது நேருக்கு நேர் விசாரணையாகும். எனவே எமது உள்ளக விசாரணை சுயாதீனமாகவும் நம்பகத்தன்மை மிக்கதாகவும் அமையும். இந்த விசாரணை செயற்பாட்டில் புலம் பெயர்ந்தவர்களும் சாட்சியங்களை அளிக்கலாம்.
 
மேலும், யாருக்கு எதிராக முறைப்பாடு முன்வைக்கப்படுகின்றதோ அவர்கள் விசாரிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
புதிய ஆணைக்கு அமைவாக சர்வதேச தரத்துக்குட்பட்ட வகையில் விசாரணைகளை நடத்துவதற்காக ஆலோசனை வழங்கவே சர்வதேச நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
அவர்களை எமது விசாரணை அமர்வுகளில் பங்குபற்றுவதற்கு நாங்கள் அழைக்கவுள்ளோம் என்றும் பரணகம கூறினார்.

No comments:

Post a Comment