Thursday, July 24, 2014

பிரித்தானியா புலி ஆதரவு அமைப்புக்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படவில்லை: உலக யுத்த ஞாபகார்த்த திருப்பலிக்கான அழைப்பை ஏற்க ஜனாதிபதி மறுப்பு!

Thursday, July 24, 2014
கிளாஸ்கோ தேவாலயத்தில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுநலவாயத்துக்கான முதலாவது உலக யுத்த ஞாபகார்த்த திருப்பலியில் கலந்துகொள்ளுமாறு கிடைத்த அழைப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஏற்க மறுத்துள்ளார்.
 
புலிகள் சார்பு குழுக்கள் திட்டமிட்டிருந்த எதிர்ப்பின் மத்தியிலும் பிரித்தானியா அரசாங்கம் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என அதிகாரிகள் கூறியதை காரணமாக காட்டி ஜனாதிபதி இந்த அழைப்பை மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொள்ளமாட்டார் என்பதை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கலாசார ஊடகங்கள் மற்றும் விளையாட்டுக்கான இராஜாங்க செயலாளர் சஜிட் ஜாவிட்டிற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
 
இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு, பிரித்தானிய அரசாங்கம்;  விடுத்த அழைப்பு ஜூன் மாதம் 24 ஆம் திகதி கிடைத்ததாக அரசாங்க தகவல்கள் தெரிவித்தன.
 
ஜனாதிபதி முன்னர் பிரித்தானியா சென்றபோது  புலிகள் சார்பு புலம் பெயர்ந்தோர் குழுக்களால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ஆர்ப்பாட்டங்களின் போது, எதிர்ப்பாளர்கள் போத்தல்களையும் வெற்று தகர பேணிகளையும், ஜனாதிபதி பயணித்த கார் உட்பட வாகனத்தொடர்மீது எறிந்தனர்.
 
புலிகள் இயக்கம் பிரித்தானியாவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் தடைசெய்யப்பட்ட இயக்கமாகும்.
 
இந்த கடிதத்தில், இச் சம்பவத்தின்போது சட்ட அமுலாக்க அதிகாரிகள் வெறுமனே பார்த்துக்கொண்டு இருந்ததையிட்டு அரசாங்கம் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது என தெரியவருகிறது.
 
எலிசபெத் மகாராணியின் வைரவிழா கொண்டாடப்பட்டதுக்காக, ஜூன் 2012 ஆம் ஆண்டு ஜனாதிபதி லண்டன் சென்றபோது பிரதான நிகழ்வின்போது இவ்வாறான பிரச்சினைகள் இருக்கவில்லை என அரசாங்கம் கூறுகிறது.

No comments:

Post a Comment