Tuesday, July 22, 2014

அதிமுக சார்பில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் ஜெயலலிதா பங்கேற்பு!

Tuesday, July 22, 2014
சென்னை: அதிமுக சார்பில் புனித ரம்ஜான் நோன்பு இப்தார் திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் ஜெயலலிதா தலைமை தாங்கினார். விருந்துக்கு வந்தவர்களை எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான தமிழ்மகன் உசேன் வரவேற்றார்.
 
அமைச்சர் அப்துல் ரஹீம் வாழ்த்துரை வழங்கினார். இதில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:இஸ்லாம் மார்க்கம் என்பது நல்வழி மார்க்கம். ஒற்றுமையுடன் இருப்பது, நல்ல காரியங்கள் செய்வது, தர்மம் செய்வது, சலாம் சொல்ல முந்திக் கொள்வது, மதபேதம் பாராமல் அனைவரிடத்திலும் அன்புடன் நடந்து கொள்வதை வலியுறுத்துகிறது. கோபத்தை அடக்குவது, மன்னிப்பது, சண்டை சச்சரவுகளை தீர்த்து வைப்பது போன்ற நற்பண்புகளை போதித்தவர் நபிகள் நாயகம். அவர் நற்பண்புகளை மட்டும் போதிக்காமல், தீயவர்களையும் நல்வழிப்படுத்தியவர்.
 
நற்பண்புகளை போதித்தது மட்டுமல்லாமல், அதன்படி வாழ்ந்தும் காட்டியவர். அவரது போதனைகளை அனைவரும் கடைபிடித்து வாழ்ந்தால், இந்திய நாடு அமைதி பூங்காவாக விளங்கும்.இவ்வாறு ஜெயலலிதா பேசினார். அதிமுக சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் அன்வர்ராஜா எம்.பி. நன்றி கூறினார்.

No comments:

Post a Comment