Monday, June 2, 2014

இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையின் அரசியல் ஸ்திரத் தன்மைக்கு ஒரு அச்சுறுத்தல்: அமைச்சர் விமல் வீரவன்ச!


Monday, June 02, 2014
இலங்கை::இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையின் அரசியல் ஸ்திரத் தன்மைக்கு ஒரு அச்சுறுத்தல் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மோடியும் அவரது புதிய அரசாங்கமும் 13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என அழுத்தம் கொடுத்துள்ளதுடன் இந்தப் பிரச்சினை தொடர்பில் இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொரளை எல்விட்டிகல தொடர்மாடியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் விமல் வீரவன்ஸ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மோடி 13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று தீர்வை வழங்குமாறு கூறியுள்ளார். இதனால் அதனை அரசாங்கம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் ஆட்சியை விட்டு செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும். இவற்றினால் மக்கள் மத்தியில் கிளர்ச்சிகள் ஏற்பட்டு அரசாங்கத்திற்கு பாதிப்புகள் ஏற்படும் என எதிர்க்கட்சிகள் எண்ணிக் கொண்டிருக்கின்றன.

பிரதமர் மோடி இலங்கை தொடர்பில் சாதகமாக செயற்படுவார் எனசிலர் எண்ணுகின்றனர். போர் நடைபெற்ற காலத்தில் இந்தியாவில் பாரதீய ஜனதா ஆட்சியில் இருந்திருந்தால் போருக்கு எதிராக அழுத்தங்கள் அதிகரித்திருக்கும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததால் அழுத்தங்களை சமாளிக்க முடிந்தது.

எவ்வாறாயினும் இலங்கை மக்களே நாட்டுக்கு எது நல்லது என்பதையும் 13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதா இல்லையா என்பதை தீர்மானிப்பார்கள் எனவும் வீரவன்ஸ கூறியுள்ளார்.
 
இந்தியா உட்பட ஏனைய நாடுகளில் இலங்கையில் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்துள்ளன. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அந்த நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

தென் ஆபிரிக்கா ஏற்கனவே இலங்கைக்கான சிறப்பு தூதுவர் ஒருவரை நியமித்துள்ளது. இந்தியாவும் இலங்கைக்கான சிறப்பு தூதுவர் ஒருவரை நியமிக்கவுள்ளது. இந்தியா, தென்னாபிரிக்கா உட்பட ஏனைய நாடுகளை கையாளும் போது உரிய முனைப்புகளுடன் அரசாங்கம் செயற்பட வேண்டும் எனவும் வீரவன்ஸ கூறியுள்ளார்.

No comments:

Post a Comment