Thursday, June 19, 2014
இலங்கை::அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் இடம்பெற்றுள்ள சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். இனம், மதம், தராதரம் பாராது குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்படும் என தெரிவித்த ஜனாதிபதி, நாட்டில் சட்டம் நடைமுறையில் உள்ளதாகவும் அந்த சட்டத்தை உரிய வகையில் நடைமுறைப்படுத்த தாம் பின்னிற்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பேருவளை மற்றும் அளுத்கம பிரதேசங்களில் கடந்த சில தினங்களாக நிலவிய அமைதியின்மைச் சூழ்நிலை தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று அங்கு விஜயம் செய்து பல பிரதேசங்களையும் நேரில் பார்வையிட்டுள்ளார். இதனையடுத்து மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் அமைதியின்மை தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி அதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நாம் கடந்த 30 வருடங்களாக இனவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள். இனியும் அத்தகைய நிலைமை நாட்டில் தோன்றுவதற்கு இடமளிக்க முடியாது. அத்தோடு வதந்திகளினால் நாட்டை சீரழிப்பதற்கு இடமளிக்க முடியாது.
நாட்டில் வேறு விதமாக கறுப்பு ஜுலையை உருவாக்குவதற்கு எவராவது முயற்சித்தால் அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. நாட்டில் அனைத்து இன, மத மக்களும் இத்தகைய தருணத்தில் சிந்தித்துச் செயற்பட வேண்டியது அவசியமாகும். மக்களைத் தூண்டிவிட்டு அநாவசிய மோதல்களை உருவாக்குவதற்கு தோற்றுப்போன அரசியல் குழுக்கள் செயற்பட்டு வருகின்றன. இத்தகைய சம்பவங்களின் பின்னணியில் செயற்படும் அத்தகைய குழுக்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு நாம் பாதுகாப்புப் பிரிவினருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பொலிவியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை முடித்துக்கொண்டு நேற்று நாடு திரும்பிய ஜனாதிபதி உடனடியாகவே பேருவளை பிரதேசத்திற்குச் சென்றிருந்தார். அங்கு பிரதேச சமய தலைவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகளை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.சம்பவம் தொடர்பில் பாரபட்சமற்ற வகையில் ஆராய்ந்த ஜனாதிபதி. இதனை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அனைத்துத் தரப்பினரும் எதிர்காலத்தில் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இந்த சம்பவம் காரணமாக வீடுகளை இழந்துள்ள மக்கள் தொடர்பில் தெரிவிக்கப்பட்ட விடயங்களை கவனத்திற்கொண்ட ஜனாதிபதி அவர்களை உடனடியாக மீளக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்ததுடன் அதற்கான பொறுப்பை தாம் ஏற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேற்படி நிலமைகளினால் சேத மடைந்துள்ள சொத்துக்களை திருத்தியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்ட ஜனாதிபதி, இந்த நடவடிக் கைகளில் எவருக்கும் அநீதி இடம்பெறக் கூடாது என்பதையும் சுட்டிக் காட்டி யுள்ளார்.
அமைச்சர்கள் மேர்வின் சில்வா, ரோஹித அபேகுணவர்தன. ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் நந்த மல்லவரச்சி, இராணுவத் தளபதி தயாரத்நாயக்க, பொலிஸ் மா அதிபர் என். கே. இலகக்கோன் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.







No comments:
Post a Comment