Tuesday, June 3, 2014

முல்லைத்தீவு விஜயம் மேற்கொண்ட சீ.வி க்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

Tuesday, June 03, 2014
இலங்கை::
வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்திருந்தார்.
சட்டவிரோதமாக அகழ்ந்து செல்லப்படும் வாவெட்டிமலை மற்றும் தட்டயமலை கற்குவாரிகளுக்கு சென்றிருந்த வட மாகாண முதலமைச்சர் அங்குள்ள நிலைமைகளை கேட்டறிந்துகொண்டார்.
 
அதனைத் தொடர்ந்து ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கும், இயங்காதுள்ள ஓட்டுத் தொழிற்சாலைக்கும், காணிப் பிரச்சினைகள் காணப்படும் கொக்கிளாய் பிரதேசத்திற்கும் சென்றிருந்தார்.
 
இதேவேளை, புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபைக் கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.
 
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்த வட மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட தரப்பினரை இடைமறித்து தட்டயமலை கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
தமது கிராமத்திற்கு குடிநீர் மற்றும் வயல் நிலங்களுக்கான நீரைப் பெற்றுதருமாறு கோரியே தட்டயமலை மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்த கிராமமக்கள், முதலமைச்சர் பயணித்த வாகனத்தை இடைமறித்து எதிர்ப்பை வெளியிட்டனர்.
 
இதேவேளை, கிராமத்தின் மக்கள் பிரதிநிதிகள் சிலரை வட மாகாண சபைக்கு வருகைதந்து, கோரிக்கையை முன்வைக்குமாறு கோரப்பட்டதைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

No comments:

Post a Comment