இலங்கை::கடவுச்
சீட்டுக்கள் காணாமல் போகும் அல்லது களவாடப்படும் பட்சத்தில் அது தொடர்பில்
உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து விட்டு அந்த
முறைப்பாட்டு அறிக்கையின் பிரதியுடன் தங்களுக்கு அறியத்தருமாறு குடிவரவு
மற்றும் குடியகயல்வு திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளர் ஜயவீர
பெர்னாண்டோ தெரிவித்தார்.
காணாமல்போன அல்லது களவாடப்பட்ட
கடவுச் சீட்டுக்கள் தொடர்பில் முறைப்பாடு செய்த பின்னர் அவை மீண்டும்
கிடைக்கும் பட்சத்தில் அவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர்
வேண்டுகோள் விடுத்தார்.
பாதுகாப்பு மற்றும் சமகால
விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர்
மாநாடு கொள்ளுப்பிட்டியிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின்
ஊடக மையத்தில் அதன் பணிப்பாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தலைமையில்
இடம்பெற்றது.
இதன் போது காணாமல்போன மற்றும் களவாடப்பட்ட கடவுச்
சீட்டுக்கள் தொடர்பாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உதவிக்
கட்டுப்பாட்டாளர் ஜயவீர பெர்னாண்டோ மேலும் விளக்கமளிக்கையில் :-
காணாமல்போன அல்லது களவாடப்பட்ட கடவுச் சீட்டுக்கள் தொடர்பில் பொலிஸ்
முறைப்பாட்டு அறிக்கை பிரதியுடன் உரிய முறையில் எமக்கு தகவல் கிடைக்கும்
பட்சத்தில் அந்த கடவுச் சீட்டை எவரும், எந்த சந்தர்ப்பத்திலும் பயன்படுத்த
முடியாதவாறு அதனை செல்லுபடியற்றதாக செய்துவிடுவோம். அத்துடன் அதனை வேறு
ஒருவர் சட்டவிரோதமான முறையில் பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில் அந்த
கடவுச் சீட்டு தொடர்பில் (இன்டர்போல்) சர்வதேச பொலிஸாருக்கும் உடனடியாக
தகவல்களை வழங்கிவிடுவோம்.
எனவே, காணாமல்போன அல்லது களவாடப்பட்ட கடவுச் சீட்டுக்கள்
தொடர்பில் முறைப்பாடு செய்ததன் பின்னர் அது மீண்டும் கிடைக்கப் பெற்றால்
அவற்றை பயன்படுத்த வேண்டாம் ஏனெனில் அவ்வாறு பயன்படுத்தும் பட்சத்தில்
உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்க
நேரிடும் அத்துடன் மேலதிக விசாரணைகளுக்கும் உட்படத்தப்படுவீர்கள் என்றார்.
காணாமல்போன அல்லது களவாடப்பட்ட கடவுச் சீட்டு தொடர்பில்
முறைப்பாடுகளை பெற்றுக் கொள்வதற்காக பெறவேண்டிய தகவல் அடங்கிய படிவம் ஒன்று
நாடு முழுவதிலும் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தமது திணைக்களத்தினால் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று காணாமல்போன கடவுச்
சீட்டுக்கு பதிலாக புதிய கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ளலாம். எனினும்
அக்கடவுச் சீட்டுக்கு பத்து வருடம் கடந்திருக்காவிடில் மேலதிக தண்டப் பணமாக
பத்தாயிரம் ரூபாவைச் செலுத்த வேண்டும் என்றார்.
அதேபோன்று
வெளிநாட்டில் இவ்வாறு சம்பவம் இடம்பெறும் பட்சத்தில் நீங்கள்
தங்கியிருக்கும் நாட்டில் அருகில் உள்ள பொலிஸாரிடம் முறைப்பாடு செய்து அது
தொடர்பில் தூதரகம் அல்லது கொன்சியுலர் பிரிவுக்கு அறிவிக்கும் பட்சத்தில்
புதிய கடவுச் சீட்டை பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.
காணாமல்போன அல்லது களவாடப்பட்ட கடவுச் சீட்டுக்கள் மீண்டும் கிடைக்கப்
பெறும் பட்சத்தில், காணாமல்போன அல்லது களவாடப்பட்ட கடவுச் சீட்டு கருமபீடம்,
5வது மாடி, குடிவரவு மற்றும் குடியகயணல்வு திணைக்களம், இலக்கம் 41, ஆனந்த
ராஜகருணா மாவத்தை, கொழும்பு – 10, இலங்கை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்
அவ்வாறு அனுப்பப்படும் கடவுச் சீட்டுக்கள் அழித்துவிடப்படும் என்றார்.
இத தவிர 0115329502 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் அல்லது
www.immigration.gov.lk மூலம் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.

No comments:
Post a Comment