Thursday, June 19, 2014
இலங்கை::அளுத்கம – பேருவளை மற்றும் வெலிபென்ன பிரதேசங்களில் இடம்பெற்ற வன் செயல்கள் தொடர்பில் 7 முஸ்லிம்களும் 48 சிங்களவர்களும் கைது செய்யப்பட்டதாகவும் இவர்களில் 35 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
இன்று பிற்பகல் தகவல் ஊடக அமைச்சில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வராந்த ஊடகவியலளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
முஸ்லிம்களுக்கு எதிராக வன் செயல்களை பொலிஸார் தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முற்றாக மறுக்கிறோம்.
பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் என்பதும் வெறும் வதந்தியாகும்.
இந்த வன்முறையில் தர்காநகரில் 2 முஸ்லிம்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர். வெலிப்பன்னையில் 1 தமிழர் தாக்கிக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த வன்செயல் தொடர்பில் அளுத்கம, பேருவளை மற்றும் வெலிபன்ன பிரதேசங்ளில் இருந்து 138 முறைப்பாடுகள் கிடைத்துள்ள.
பதற்றமான ஒரு சூழ்நிலையில் பொது பல சேனாவுக்கு கூட்டம் நடத்த பொலிஸார் அனுமதி வழங்கியதால்தான் வன்செயல் இடம்பெற்றதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டும் தவறானது.
ஏனெனில் கூட்டம் நடத்த நாம் பொதுபல சேனாவுக்கு அனுமதி வழங்கவில்லை. அது பொசன் காலமாக இருந்தால் உள்ளூரில் இயங்கும் 'சாசனாரக்ஷ பலமண்டல' என்ற அமைப்புக்கே கூட்டம் நடத்த பொலிஸார் அனுமதி வழங்கினர்.
சம்பவத்தோடு தொடர்புள்ள சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். துரித விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. குற்றவாளிகளுக்கெதிராக பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment