Monday, June 2, 2014

ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவில் 13 பேர் அங்கம் வகிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது!


Monday, June 02, 2014
இலங்கை::ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவில் 13 பேர் அங்கம் வகிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு அமைய ஐக்கிய நாடுகள் மனித உரிமப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கை தொடர்பில் விசாரணை நடாத்த ஆணைக்குழு ஒன்றை நிறுவ உள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்படும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் இந்த விசாரணைக்குழு விசாரணை நடத்த உள்ளது. விசாரணைக்குழுவில் குறைந்தபட்சம் 13 உறுப்பினர்கள் அங்கம் வகிக்க உள்ளதாகவும், இரண்டு அதிகாரிகள் மேற்பார்வை உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இரசாயன பகுப்பாய்பு டிஜிட்டல் ஆதாரங்கள் ஆய்வு போன்றன தொடர்பில் நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரிகளும் விசாரணைக் குழுவில் அங்கம் வகிக்க உள்ளனர்.

எதிர்வரும் எட்டு மாத காலப்பகுதியில் குறித்த விசாரணைக் குழுவின் அதிகாரிகள் இலங்கை, வட அமெரிக்கா, ஆசிய பசுபிக் நாடுகள் மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு நிபுணர்கள் பத்து மாத கால அடிப்படையில் விசாரணைக் குழுவிற்கு தேவையான ஆலோசனை வழிகாட்டல்களை வழங்க உள்ளனர். சர்வதேச ரீதியில் மிகவும் முக்கியமான ஓர் அதிகாரி இந்தக் குழுவினை வழி நடத்துவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் கொபி அனான் இந்தக் குழுவிற்கு தலைமை தாங்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோத கடத்தல்கள், கொலைகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதிகளுடனும் கலந்தோசிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. எதிர்வரும் பத்து நாட்களுக்குள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கை குறித்த விசாரணைக்குழுவினை அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment