Tuesday, May 27, 2014

முல்லைத்தீவு, சாலை கடற்பரப்பிலிருந்து ஹெலிகொப்டர் ஒன்றின் பாகங்களை கடற்படையினர் மீட்டெடுத்துள்ளனர்!

Tuesday, May 27, 2014
இலங்கை::முல்லைத்தீவு, சாலை கடற்பரப்பிலிருந்து ஹெலிகொப்டர் ஒன்றின் பாகங்களை கடற்படையினர் மீட்டெடுத்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் பிரசன்ன கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
 
கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து வட பிராந்திய கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே பாகங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். முல்லைத்தீவு வடக்கு. சாலை கடற்பரப்பிலிருந்து சுமார் ஒரு கடல் மைலுக்கு அப்பால் உள்ள கடற்பரப்பி லிருந்தே ஹெலிகொப்டரின் விசிறி (பிளேட்) உட்பட பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 
வட பிராந்திய கடற்படை தளத்தைச் சேர்ந்த கடற்படை சுழியோடிகளும் கடற்படைக்குச் சொந்தமான “ரணகஜ” கப்பலையும் பயன்படுத்தியே ஹெலிகொப்டரின் பாகங்களை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். மீட்டெடுக்கப்பட்ட பாகங்கள் மேலதிக விசாரணைகளுக்காக காங்கேசன்துறை துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் கடற்படைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
 
இதேவேளை கடற்படையினரால் மீட்டெடுக்கப்பட்டுள்ள பாகங்கள் ஹெலிகொப்டரினுடையது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த விமானப் படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் கிஹான் செனவிரத்ன. இந்த ஹெலிகொப்டர் யாருக்கு சொந்தமானது. எப்போது விழுந்தது என்பன தொடர்பில் விரிவாக ஆராயும் பொருட்டு விமானப் படையின் நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரி ஒருவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்றார்.
 
சிறிது காலத்திற்கு முன்னர் விபத்துக்குள்ளான விமானப் படை ஹெலிகொப்டரினது பாகங்கள் இவை என நம்பப்படுவதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள போதிலும் அது தொடர்பில் உடனடியாக கூற முடியாது என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
 
வீழ்ந்த விமானங்களின் பாகங்கள் நீண்ட காலமாக கடலில் இருந்துள்ளதால் அந்த பாகங்கள் உக்கிப் போயுள்ளன. இதனால் இவற்றை உடனடியாக அடையாளம் காணுவதில் சிரமம் உள்ளது. எனினும் விரிவான விசாரணைக்கு பின்னரே உறுதியாக கூற முடியும் என்றார்.
 
பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் முன்னர் கடலில் வீழ்த்தப்பட்டுள்ளன என்பதை சுட்டிக்காட்டிய அவர், தற்போது மீட்டெடுக்கப்பட்டவை இவற்றில் எதுவென உடனடியாக கூற முடியாது. எனவே துறைசார் நிபுணர்களின் விரிவான விசாரணைக்கு பின்னர் அது தொடர்பிலான தகவல்களை சரியாக கூறமுடியும் என்றார்.
 
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கடற்படையினரும் விமானப் படையினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர் என்றும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment