Friday, May 2, 2014

சவால்கள் எந்தத் திசையிலிருந்து வந்தாலும் அதை எதிர்கொள்ள நாம் தயாராக உள்ளோம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

 
HE-speach-1
HE-sp-5
HE-sp-6Friday, May 02, 2014
சவால்கள் எந்தத் திசையிலிருந்து வந்தாலும் அதை எதிர்கொள்ள நாம் தயாராக உள்ளோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். மேதினக் கூட்டத்தில் இலட்சக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், நாம் யாருக்கும் அடிபணியப்போவதில்லை. நாட்டை அடிமைப்படுத்த இடமளிக்கப்போவதுமில்லை எனவும் தெரிவித்தார்.
மக்களது உரிமையைப் பாதுகாக்கவே நாம் பாதயாத்திரை சென்றோம். எதிர்க்கட்சியினரோ அபிவிருத்தியின் முன்னேற்றத்தை இல்லாதொழிக்கும் நோக்கிலேயே தெற்கிற்கு பயணம் செய்தனர் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேதினக் கூட்டம் கொழும்பு பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
பிரதமர் டி.எம்.ஜயரட்ன, அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால.டி.சில்வா, டளஸ் அழகப்பெரும, தினேஷ் குணவர்த்தன, ஏ.எல்.எம்.அதாவுல்லா, ரிசாட் பதியுதீன் உட்பட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், மாகாண முதல்வர்கள், மாகாண ஆளுநர்கள், கட்சித் தலைவர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி;
 
முழு உலகும் மேதினம் கொண்டாடும் இவ்வேளையில் உலகில் பாதுகாப்பானதும், தூய்மையானதுமான கொழும்பு நகரில் மக்கள் திரள் மத்தியில் ஒரே கொடியின் கீழ் நாம் மேதினம் கொண்டாட வழிவகுக்கப்பட்டுள்ளது. முப்படையினரது அர்ப்பணிப்பும், தொழிலாளர் வர்க்கத்தினது பொறுமையுமே இதற்கு உறுதுணையாக அமைந்துள்ளது. அதன்பிரதி பலனையே இப்போது நாம் அனுபவிக்கின்றோம்.
இங்கு இந்த மேதினக் கூட்டத்தில் திரண்டுள்ள இலட்சக்கணக்கான மக்களை நோக்கும்போது எம்மை மீண்டும் எவரும் இருளுக்குள் தள்ளிவிட முடியாது என்பது புலனாகிறது.
 
தற்போது எமக்கு பல பக்கங்களிலுமிருந்து அநாவசியமான அழுத்தங்கள் வருகின்றன. இத்தகைய அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டாமென்று மக்கள் எழுப்பும் குரல் எனக்குக் கேட்கின்றது. நாம் ஒருபோதும் அடிபணிவதுமில்லை, அடிபணிவதற்கு இடமளிக்கப்போவதுமில்லை. அதேவேளை, நாட்டை அபிவிருத்தியில் முன்னேற்றும் பயணத்தில் நாம் பின்வாங்கப்போவதுமில்லை.
 
பல கட்சிகள் இணைந்துள்ள பலமான அரசாங்கத்துடனேயே இந்த நாட்டைக் கட்டியெழுப்பிவருகின்றோம். எதுவும் செய்ய முடியாத எதிர்க்கட்சி விமர்சனம் செய்வதிலேயே காலம் கழிக்கிறது.
 
தொழிலாளர்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், அவர்களது உரிமையைப் பாதுகாப்பதற்கும் நாம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். எப்போதும் தொழிலாளர் உரிமையைப் பாதுகாத்து, தொழிலாளர்களை கெளரவித்து வந்துள்ள அரசாங்கமிது. தொழிலாளருக்கான எதனையும் ஒருபோதும் நாம் இல்லாமல் செய்ததில்லை. அதேபோன்று நாட்டில் எவருக்கும் சுதந்திரமாக எதையும் செய்வதற்கு நாம் இடமளித்துள்ளோம். எமக்கு எதிராக ஊர்வலம் போவதற்கும், விமர்சனம் செய்வதற்கும், எமக்கெதிராக சேறுபூசுவதற்கும் கூட நாம் இந்த நாட்டில் இடமளித்துள்ளோம்.
 
இம்முறை மேதினத்தை பிபெற்ற சுதந்திரத்தையும் நாட்டையும் பாதுகாப்போம்பீ என்ற தொனியிலேயே நாம் ஏற்பாடு செய்துள்ளோம். நாடெங்கிலுமிருந்து இனமத பேதமின்றி அனைத்து மக்களும் இத்தேசிய நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.
 
பலாத்காரமாக ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று சிலர் நினைக்கின்றனர். அதற்கு ஒருபோதும் நாம் இடமளிக்கப்போவதில்லை. இங்கு திரண்டுள்ள மக்களும் அதனையே தெளிவுபடுத்துகின்றனர். மக்கள் எம்மோடு இருக்கும்வரை அரசாங்கத்தை எவரும் எதுவும் செய்துவிட முடியாது.
எதிர்க்கட்சி நாட்டு மக்களின் உரிமைகளையும் எதிர்பார்ப்புக்களையும் ஏகாதிபத்தியவாதிகளுக்கு காட்டிக்கொடுத்து வருகிறது. வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் இதுவே நடக்கிறது. தொழிற்சாலைகளை மூடுவதற்கு எத்தனிப்பது தொழிலாளர்களைப் பாதுகாக்கும் முயற்சி அல்ல. ஜெனீவாவுக்கு தவறான செய்தியைச் சொல்லவே இவ்வாறு செயற்படுகின்றனர். மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் உயிர்களைப் பலிகொண்டு அதை சர்வதேசத்துக்கு காட்டுவதே அவர்களது செயல். நாட்டு மக்கள் இனியும் அதற்கு இடமளிக்க மாட்டார்கள்.
 
இவ்வாறு செயற்படுபவர்கள் தலையிட்டு பெற்றுக்கொடுத்த உரிமைகள் என்ன என அவர்கள் கூறட்டும். மனித உரிமை மீறல் என்று பிரச்சினையைக் கிளப்பி. ஜீ.எஸ்.பி வரியை இல்லாமல் செய்தனர். எமக்குக் கடன்கொடுக்கக் கூடாதென்று வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
எனினும், தொழிலாளர்களின் உரிமையைப் பெற்றுக்கொடுத்த அரசாங்கமிது. 2007ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வரவுசெலவுத் திட்டத்திலும் நாம் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை அதிகரித்துள்ளோம். 6 இலட்சமாகவிருந்த அரச ஊழியர் தொகையை 13 இலட்சமாக்கியுள்ளோம். எனினும் 6 இலட்சத்தை 3 இலட்சமாக சுற்றுநிருபம் மூலம் குறைக்க முயன்றவர்களே இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். உலகில் தொழிலாளர்களுக்கு இந்தளவு சலுகைகளையும் விடுமுறையையும் வழங்கியுள்ள நாடு இலங்கைமட்டும் தான். தொழிலாளர்களுக்கு 24 மணித்தியால காப்புறுதியை வழங்கியுள்ளோம். ஊழியர் சேமலாபநிதிக்கு புதிய நியதிகளைச் சேர்த்துள்ளோம். சம்பள நிர்ணயசபை ஏற்படுத்தப்பட்டு சம்பளப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
 
இத்தகைய சலுகைகள் தெற்கு மக்களுக்கு மட்டுமன்றி வடக்கு மக்களுக்கும் கிட்டுகின்றன. மலையக மக்களுக்கு பல்வேறு வசதிகளைச் செய்துகொடுத்துள்ளோம். கல்வி, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை அவர்களுக்குப் பெற்றுக்கொடுத்துள்ளோம். நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை நாம் முன்னேற்றியுள்ளோம். வசதிபடைத்தவர்கள்,, ஏழைகள் என்ற இடைவெளியை நாம் வெகுவாகக் குறைத்துள்ளோம்.
நாம் மனித உரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்கும், மக்கள் நலனுக்குமாகவே கதிர்காமத்துக்கு பாதையாத்திரை செய்தோம். வீதிகளில் இறங்கினோம். இன்று எதிர்க்கட்சியினர் எமது அபிவிருத்தியின் முன்னேற்றத்தை இல்லாதொழிக்கவே தெற்கிற்கு செல்கின்றனர்.
 
இன்று நாடு முன்னேற்றமடைந்துள்ளது. நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் முன்னேறியுள்ளது. ஒரு ஸ்தாபனம் தவிர ஐக்கிய நாடுகள் சபையின் ஏனைய அனைத்து ஸ்தாபனங்களும் எமது நாட்டின் முன்னேற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளன. எமக்கெதிராக குற்றஞ்சுமத்துபவர்கள் தொழிலாளர் உரிமைக்காக எதைச் செய்துள்ளார்கள் என நாம் கேட்க விரும்புகின்றோம்.
மீண்டும் இந்த நாட்டை எவரும் பிளவுபடுத்த முடியாது. நாட்டில் நிலவும் ஐக்கியத்தையும் இன ஒற்றுமையையும் எவரும் இல்லாதொழிக்க முடியாது. நாம் அனைத்து நடவடிக்கைகளையும் ஜனநாயகத்துக்கு இணங்கவே மேற்கொண்டு வருகின்றோம். யாழ் நூலகம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதை இப்போது சிலர் மறந்து செயற்படுகின்றனர். மக்கள் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
 
மக்கள் நலன் என்ற பெயரில் நீலிக்கண்ணீர் வடிப்பவர்களை நான் மக்களுக்கு கோடிட்டுக் காட்டத்தேவையில்லை. அவர்களைப் பற்றி மக்கள் அறிவர். தாய் நாட்டைப் பாதுகாக்கவும் நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்பவும் மக்கள் எம்மோடு இணைந்து செயற்பட வேண்டும். சவால்கள் எங்கிருந்து வந்தாலும் அத்தனையையும் எதிர்கொள்ள நாம் தயாராகவுள்ளோம். உழைக்கும் வர்க்கம் எம்மோடு இருக்கும்வரை எம்மை எவரும் அடிமைப்படுத்த முடியாது. நாம் அனைவரும் இணைந்து தாய்நாட்டைப் பாதுகாப்போம்.

No comments:

Post a Comment