Wednesday, May 28, 2014
புதுடெல்லி::இந்தியாவின் முதல் பெண் வெளியுறவு அமைச்சர் என்ற சிறப்பை , சுஷ்மா ஸ்வராஜ் பெற்றுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில், வெளியுறவு மற்றும் வெளிநாடு வாழ் இந்திய விவகாரத் துறை அமைச்சராக சுஷ்மா சுவராஜ் (62) பொறுப்பேற்றுள்ளார்.
இதன் மூலம், அவர் இந்தியாவின் முதல் பெண் வெளியுறவு அமைச்சர் என்ற சிறப்பைப் பெறுகிறார். அத்துடன், தற்போது வெளியுறவுத் துறைக்கு செயலராக இருப்பதும் சுஜாதா சிங் என்ற பெண் என்பதும் கவனிக்கத்தக்கது.
பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடனான வெளியுறவுக் கொள்கைகள் பெரும் சவாலாக உள்ள வேளையில், வெளியுறவு அமைச்சகத்தின் பொறுப்புகள் தற்போதைய சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சட்டம் பயின்றவரான சுஷ்மா ஸ்வராஜ், உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தவர். 1970-களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைந்ததன் மூலம், அவர் தனது பொது வாழ்க்கையைத் தொடங்கினார்.
தனது 25 ஆவது வயதில் ஹரியாணாவின் கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். பின்னர், 1977 ஆம் ஆண்டு, அவர் பாஜகவின் முதல் பெண் செய்தித்தொடர்பாளாராக நியமிக்கப்பட்டார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில், தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராக சுஷ்மா நியமிக்கப்பட்டார்.
கடந்த 1998 ஆம் ஆண்டு கட்சியால் முதல்வராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, டெல்லியின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையையும் பெற்றார்.
பின்னர், டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததன் காரணமாக, டெல்லி முதல்வர் பதவியிலிருந்து விலகிய அவர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த சுஷ்மா ஸ்வராஜ், 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், 3 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment