Thursday, 1 ,May, 2014
சென்னை::உழைப்பே உயர்வு தரும், ஒளிமயமான எதிர்காலத்துக்கு
வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு தளர்வறியா உழைப்பின் மூலம் நமது நாட்டின்
பெருமையை உயர்த்தி வரும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது மே தின
வாழ்த்துக்கள் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். .
முதலமைச்சர் விடுத்துள்ள மே தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
உழைக்கும் வர்க்கம் உரிமைகளை வென்றெடுத்த உன்னதத்தைக் கொண்டாடி மகிழும்
மே தின நன்னாளில் உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த
மே தின நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
உழைப்பாளர்களின் உரிமைகள் ஒடுக்கப்பட்டு மறுக்கப்பட்டதை எதிர்த்து
ஓயாது போராடிய தொழிலாளர்கள் உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும்; உடல்
உழைப்பின் அத்தியாவசியத்தையும்; அதன் மேன்மை மிக்க சிறப்பினையும்
உலகத்தோர்க்கு உணர்த்துகின்ற திருநாளாகவும் மே தின திருநாள்
விளங்குகிறது.
உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு உலகளாவிய முக்கியத்துவம்
அளிக்கும் வகையில் இந்நாள் நாடுகளின் எல்லைகளைக் கடந்து உலகத் தொழிலாளர்கள்
அனைவருக்கும் உரித்தான நாளாகக் கொண்டாடப்படுகிறது.
உழைப்பாளர்களுக்குள் உயர்வு, தாழ்வு இல்லை; அவர்களிடையே வேறுபாடு
இல்லை; உழைப்போர் அனைவரும் சரிநிகர் சமமானவர்களே. இதைத் தான் எம்ஜிஆர்,
'ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே! உழைக்கும் மக்கள் யாவரும்,
ஒருவர் பெற்ற மக்களே!என்று உழைப்பின் மாண்பினையும், உழைப்பாளர்களின்
பெருமையையும் உயர்த்தியுள்ளார்.
உழைப்பே உயர்வு தரும்; மனநிறைவு தரும்; ஒளிமயமான எதிர்காலத்திற்கு
வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு, தளர்வறியா உழைப்பின் மூலம் நமது
நாட்டின் பெருமையை உயர்த்தி வரும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும்
எனது உளமார்ந்த மே தின நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக்
கொள்கிறேன்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துச் செய்தியில்
கூறியுள்ளார்.
No comments:
Post a Comment