Saturday, May 31, 2014
சென்னை;;அகில இந்திய காவல்துறையினருக்கான பணித் திறன் மற்றும்
விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 99 காவல்துறை வீரர்களுக்கு 2
கோடியே 8 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுத் தொகையினை முதல்வர்
ஜெயலலிதா வழங்கினார்.
காவல்துறையினரை ஊக்கப்படுத்தும் வகையில் தேசிய அளவில் ஒவ்வொரு ஆண்டும்
விளையாட்டுப் போட்டிகள், துப்பாக்கிச்சுடுதல், அதிரடி படைத்திறன் மற்றும்
குற்றப்புலனாய்வு, வெடிபொருள் கண்டுபிடித்தல், கணினி இயக்கம் முதலிய பணித்
திறன் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
2004_ம் ஆண்டு முதல் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம்,
வெள்ளிப்பதக்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசாக
முறையே 50 ஆயிரம் ரூபாய், 30 ஆயிரம் ரூபாய் மற்றும் 20 ஆயிரம் ரூபாய்
வழங்கப்பட்டு வந்தது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா இப்பரிசுத் தொகையினை 2013_ம் ஆண்டு பிப்ரவரி
மாதம், பத்து மடங்காக உயர்த்தி முறையே, 5 லட்சம் ரூபாய், 3 லட்சம் ரூபாய்
மற்றும் 2 லட்சம் ரூபாய் என்ற அளவில் வழங்க ஆணையிட்டார். மேலும், குழுப்
போட்டிகளில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களுக்கான கோப்பைகளை வெல்லும்
அணியிலுள்ள உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் முறையே 50 ஆயிரம் ரூபாய், 30
ஆயிரம் ரூபாய் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையினையும் வழங்கிட
ஆணையிட்டார்.
அகில இந்திய காவல்துறையினருக்கான பணித்திறன் மற்றும் விளையாட்டுப்
போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழ்நாடு காவல்துறையினருக்கு பரிசுகளை வழங்கும்
நிகழ்ச்சியில், தமிழ்நாடு காவல்துறை பல்வேறு போட்டிகளில் வென்றுள்ள
கோப்பைகளை முதல்வர் ஜெயலலிதா பார்வையிட்டார். அப்போது, காவல்துறை தலைமை
இயக்குநர் ராமானுஜம் தமிழ்நாடு காவல்துறை வென்றுள்ள கோப்பைகள் குறித்தும்,
அந்த கோப்பைகள் எந்தெந்த விளையாட்டுப் போட்டிகளுக்காக வழங்கப்பட்டுள்ளது
என்பது குறித்தும் எடுத்துரைத்தார். அகில இந்திய அளவில் பல்வேறு
போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பைகளை வென்ற தமிழ்நாடு காவல்துறையினருக்கு
முதல்வர் ஜெயலலிதா தனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொண்டார்.
11_வது அகில இந்திய அளவிலான நீச்சல் போட்டி உத்தரகாண்ட் மாநிலம்,
ரூர்க்கியில் 1.3.2012 முதல் 5.3.2012 வரை நடைபெற்றது. இந்த நீச்சல்
போட்டியில் தமிழ்நாடு காவல்துறை நீச்சல் குழுவைச் சேர்ந்த 4 காவல்துறை
வீரர்கள் வெண்கலப் பதக்கங்களை வென்றனர். அதற்கான பரிசுத் தொகையாக தலா 20
ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம் 80 ஆயிரம் ரூபாய்;
ஒடிசா மாநிலம், ஜாஜ்பூரில் 3.10.2012 முதல் 7.10.2012 வரை நடைபெற்ற
13வது அகில இந்திய காவல்துறையினர் துப்பாக்கிச் சுடும் போட்டியில்
தமிழ்நாடு காவல் துப்பாக்கி சுடும் குழு, மாநிலங்களுக்கிடையேயான சிறந்த
அணிக்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பையை வென்றது. அந்த அணியில் இடம்பெற்ற
15 காவல்துறையினருக்கு பரிசுத் தொகையாக மொத்தம் 8 லட்சம் ரூபாய்;
புதுடில்லி, மத்திய ரிசர்வ் காவல் படை வளாகத்தில் 16.11.2012 முதல்
20.11.2012 வரை நடைபெற்ற 61வது அகில இந்திய அளவிலான மல்யுத்தம், ஜூடோ,
ஜிம்னாஸ்டிக்ஸ், பளுதூக்குதல் மற்றும் குத்துச் சண்டைப் போட்டியில்,
பெண்களுக்கான குத்துச் சண்டைப் பிரிவில் 2 வெண்கலப் பதக்கங்களும்,
ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் 1 வெண்கலப் பதக்கமும் பெற்ற 3 காவல் துறையினருக்கு
பரிசுத் தொகையாக தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம் 60 ஆயிரம் ரூபாய்;
அசாம் மாநிலம், கவுஹாத்தியில் 24.3.2013 முதல் 30.3.2013 வரை நடைபெற்ற
61வது அகில இந்திய அளவிலான நீச்சல் போட்டியில் தமிழ்நாடு காவல்துறை
வீரர்கள் 4 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களை வென்றனர். இவர்களுக்கு
பரிசுத் தொகையாக மொத்தம் 24 லட்சம் ரூபாய்;
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் 10.10.2013 முதல் 14.10.2013 வரை
நடைபெற்ற 62_வது அகில இந்திய அளவிலான நீச்சல் போட்டியில் தமிழ்நாடு
காவல்துறை வீரர்கள் 1 வெள்ளிப் பதக்கம் மற்றும் 7 வெண்கலப் பதக்கங்களை
வென்றனர். இவர்களுக்கு பரிசுத் தொகையாக மொத்தம் 17 லட்சம் ரூபாய்;
உத்திர பிரதேச மாநிலம், லக்னோவில் 26.11.2013 முதல் 30.11.2013 வரை
நடைபெற்ற 62வது அகில இந்திய அளவிலான தடகளப் போட்டியில் 400 மீட்டர் தடை
ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற பெண் காவலருக்கு பரிசுத் தொகையாக 5 லட்சம்
ரூபாய் மற்றும் கோலூன்றி உயரம் தாண்டுதல் (ஞடிடந ஏயரடவ) போட்டியில்
வெள்ளிப் பதக்கம் வென்ற காவலருக்கு பரிசுத் தொகையாக 3 லட்சம் ரூபாய், என 8
லட்சம் ரூபாய்;
ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் 9.12.2013 முதல் 13.12.2013 வரை
நடைபெற்ற 62வது அகில இந்திய அளவிலான மல்யுத்தம், ஜூடோ, ஜிம்னாஸ்டிக்ஸ்,
பளுதூக்குதல் மற்றும் குத்துச் சண்டைப் போட்டியில், ஜூடோ பிரிவில் வெண்கலப்
பதக்கம் வென்றவருக்கும், குத்துச் சண்டைப் பிரிவில் வெண்கலப் பதக்கம்
வென்றவருக்கும் தலா 2 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 4 லட்சம் ரூபாய்;
கேரளா மாநிலம், திருச்சூரில் 20.1.2014 முதல் 24.1.2014 வரை நடைபெற்ற
62வது அகில இந்திய அளவிலான கைப்பந்து விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு
காவல்துறை குழு மூன்றாம் இடத்தை வென்றது. அந்த அணியில் இடம்பெற்ற 14
காவல்துறை வீரர்களுக்கு பரிசுத் தொகையாக தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம்,
மெத்தம் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்;
சென்னையில் 22.1.2014 முதல் 27.1.2014 வரை நடைபெற்ற 4வது அகில இந்திய
அளவிலான அதிரடிப்படை போட்டியில் தமிழ்நாடு காவல்துறை முதல் இடத்தைப்
பிடித்து கோப்பையை வென்றது. மத்திய துணை இராணுவப் படைகள் மற்றும் பிற மாநில
காவல் அணிகள் அளித்த கடுமையான போட்டிக்கிடையே, தமிழ்நாடு காவல்துறை இந்தச்
சாதனையை நிகழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ்நாடு
காவல் அணி, தடை ஓட்டப் போட்டிக்கான கோப்பையினையும், மாநிலங்களுக்கிடையே
சிறந்த அணிக்கான கோப்பையினையும் வென்றுள்ளது. அந்த அணியில் இடம்பெற்ற 28
காவல்துறை வீரர்களுக்கு பரிசுத் தொகையாக தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம்,
மொத்தம் 14 லட்சம் ரூபாய்;
அசாம் மாநிலம், திபுவில் 24.2.2014 முதல் 28.2.2014 வரை நடைபெற்ற 14வது
அகில இந்திய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கம்
வென்ற காவலருக்கு 2 லட்சம் ரூபாய்;
ஹரியானா மாநிலம், மதுபானில் 7.3.2014 முதல் 14.3.2014 வரை நடைபெற்ற
57வது அகில இந்திய அளவிலான காவல் திறனாய்வு போட்டியில் தமிழ்நாடு காவல்துறை
குழு 13 தங்கப் பதக்கங்கள், 9 வெள்ளி பதக்கங்கள், 6 வெண்கலப் பதக்கங்கள்,
என மொத்தம் 28 பதக்கங்களை வென்று சாதனை படைத்தது. இந்தச் சாதனை தமிழ்நாடு
காவல்துறை வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும். மேலும், இந்தப் போட்டியில்
ஒட்டுமொத்த கோப்பையையும் தமிழ்நாடு காவல் அணி வென்றுள்ளது. அந்த அணியில்
இடம்பெற்ற 26 காவல்துறை வீரர்களுக்கு பரிசுத் தொகையாக மொத்தம் 1 கோடியே 27
லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்;
என மொத்தம் 99 காவல்துறை வீரர்களுக்கு 2 கோடியே 8 லட்சத்து 80 ஆயிரம்
ரூபாய்க்கான பரிசுத் தொகையினை முதல்வர் ஜெயலலிதா நேற்று வழங்கி
வாழ்த்தினார்.
மேலும், தமிழ்நாடு காவல்துறையின் மோப்ப நாய் பிரிவை சேர்ந்த 5 மோப்ப
நாய்கள் போதைப் பொருட்கள் மற்றும் வெடிமருந்துப் பொருட்களை கண்டு
பிடிக்கும் போட்டிகளில் 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களோடு ஒரு
கோப்பையையும் வென்றது. தமிழ்நாடு மோப்ப நாய் பிரிவைச் சேர்ந்த நாய்களின்
திறமையை முதல்வர் ஜெயலலிதா தனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொண்டார்.
முதலமைச்சரிடமிருந்து பரிசுத்தொகையினைப் பெற்றுக் கொண்ட காவல்துறை
வீரர்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டு,
முதலமைச்சருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அப்போது, முதல்வர் ஜெயலலிதா "அகில இந்திய அளவில் தமிழக
காவல்துறைக்கும் தமிழ்நாடு அரசிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை
சேர்த்திருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான
வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் மென்மேலும் பல போட்டிகளில்
கலந்து கொண்டு, பல சாதனைகளைப் படைத்து, அகில இந்திய அளவில் பல பரிசுகளை
வென்று தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாடு காவல்துறைக்கும் பெருமை சேர்க்க
வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத்,
தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறை முதன்மைச் செயலாளர்
அபூர்வ வர்மா, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் கே. ராமானுஜம், சென்னை
பெருநகர காவல்துறை ஆணையர் எஸ். ஜார்ஜ், காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர்
(ஆயுதக் காவல் படை) ந. தமிழ்செல்வன், காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர்
(குற்றப் புலனாய்வுத் துறை _ குற்றப்பிரிவு) திரகரன் சின்கா, காவல்துறை
கூடுதல் தலைமை இயக்குநர் (செயலாக்கம்) சஞ்ஜய் அரோரா, மற்றும் காவல்துறை
உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment