Tuesday, May 27, 2014
ராமேஸ்வரம்
: போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி, 910 நாட்கள் இலங்கை சிறையில்
வாடிய ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை, இலங்கை அரசு விடுவித்தது.ராமேஸ்வரம்,
தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரசாத், லாங்லெட், எமர்சன், வில்சன், அகஸ்டஸ் ஆகிய
5 மீனவர்கள், கடந்த 28.11.2011 அன்று, விசைப்படகில் சென்று, நடுக்கடலில்
மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் பிடித்து, போதை
பொருள் (பிரவுன் சுகர்) கடத்தியதாக, பொய் வழக்கு பதிந்து யாழ்ப்பாணம்
சிறையில் அடைத்தனர்.
இதை கண்டித்தும், 5 மீனவர்களை விடுவிக்க கோரியும்,
ராமேஸ்வரம், பாம்பனில் மீனவர்கள் வேலைநிறுத்தம், தொடர் உண்ணாவிரதப்
போராட்டம் நடத்தினர். அவர்களையும் விடுவிக்க முயற்சி எடுக்கும்படி, மீனவ
சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தியும், அப்போதைய மத்திய காங்., அரசு எந்த
நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையில், இலங்கை அரசு, 5 மீனவர்கள்
மீதான வழக்கை, கொழும்பு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி, அவர்களை கொழும்பு
வெலிக்கடை சிறையில் அடைத்தது.இந்நிலையில், பிரதமர் பதவி ஏற்பு விழாவுக்கு
வருமாறு, மோடி விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்ட இலங்கை அதிபர் ராஜபக்ேஷ
நல்லெண்ணத்தில், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க
உத்தரவிட்டார். வெலிக்கடை சிறையில் உள்ள மீனவர்கள் 5 பேரையும் விடுவிக்க,
இலங்கை அட்டர்னி ஜெனரல் கொழும்பு கோர்ட்டுக்கு, நேற்று கடிதம் அனுப்பினார்.
இன்னும், ஓரிரு நாட்களில் 5 மீனவர்களும் தமிழகம் வரவுள்ளனர்.
இதையறிந்த,
ராமேஸ்வரம் மீனவர்களும், உறவினர்களும் , ராமேஸ்வரம் மீன் இறக்கும்
ஜெட்டியில், பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினர். அப்போது,' பிரதமர் மோடி
வாழ்க, ராஜபக்ேஷவுக்கு நன்றி' என, மீனவர்கள் கோஷமிட்டனர். இதுகுறித்து
மீனவர் சங்க தலைவர் சேசு கூறியதாவது:கடந்த 910 நாட்களாக, சிறையில் வாடிய
அப்பாவி மீனவர்கள் 5 பேரும், புதிய பிரதமராக மோடி பதவி ஏற்கும் நாளில்,
விடுதலையாவது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு பிரதமர் மோடி, சிறையில் இருந்த
மீனவர் குடும்பத்திற்கு உதவி செய்த தமிழக முதல்வர், இலங்கை அதிபர் ராஜபக்ேஷ
ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம், என்றார். கடத்தல் வழக்கில்,
இலங்கை சிறையில் உள்ள 14 மீனவர்களில், நாகை, ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர்
மட்டும் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தை சேர்ந்த
சூசை, அலங்காரம், சந்திரன், பாலமுருகன், மாரி, ஜீவா ஆகிய 6 பேரையும்
விடுதலை செய்ய, இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், 14 மீனவர்களும் சில
நாட்களில் தமிழகத்திற்கு வர உள்ளதாக, மீனவர் சங்க தலைவர் யூ. அருளானந்தம்
தெரிவித்தார்.
No comments:
Post a Comment