Saturday, May 3, 2014

இலங்கையில் எதிர்வரும் 6ம் திகதி முதல் 10 ம் திகதி வரை நடைபெறவுள்ள உலக இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இதுவரை 169 நாடுகள் உறுதி!

Saturday, May 03, 2014
இலங்கை::இலங்கையில் எதிர்வரும் 6ம் திகதி முதல் 10 ம் திகதி வரை நடைபெறவுள்ள உலக இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இதுவரை 169 நாடுகள் உறுதி செய்துள்ளன.
 
இதேவேளை இளைஞர் விவகாரங்கள் தொடர்பான அமைச்சர்கள் 28 பேரும் அதிகாரிகள் மட்டத்தில் 62 பேரும் இலங்கை வருகின்றனர் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும நேற்று தெரிவித்தார். உலக நாடுகளிலிருந்து சுமார் 6500 விண்ணப்பங்களும், இலங்கையிலிருந்து 3200 விண்ணப்பங்களும் கிடைத்தன. எனினும் 350 பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் விதத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்த உலக இளைஞர் மாநாடு மட்டுமல்ல இலங்கையில் இளைஞர் சேவைகள் மன்றமும் அரசியல் கலக்காத, நிறம், மதம் கலக்காத ஒன்றாகவே இயங்குகிறது.
 
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்க்கட்சியிலுள்ள இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்துவார்கள். எல்லோருக்கும் எழுத்து மூல அழைப்பையும் விடுத்திருக்கிறோம் என்றும் அமைச்சர் டலஸ் தெரிவித்தார்.
 
அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் நாமல் ராஜபக்ஷ எம்.பியின் இணைத் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உலக இளைஞர் மாநாட்டில் ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க மற்றும் மத்திய அமெரிக்க நாடுகள் கலந்து கொள்ளவுள்ளன.
 
அமைச்சர் டலஸ் அழகபெரும எழுதிய பாடலுக்கு பாத்திய, சந்தோஷ் இசை குழுவினரால் இசையமைக்கப்பட்டு பாடப்பட்ட பாடல் நேற்று தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் திரையிடப்பட்டது.

No comments:

Post a Comment