Saturday, May 03, 2014
கவுகாத்தி:அசாமில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. தீவிரவாதிகளின் தாக்குதல் சம்பவத்திற்கு சோனியா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அசாமில் போடோ பழங்குடியினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நடைபெற்று வருகிறது. மேலும், போடோ தீவிரவாதிகள் நீண்ட ஆண்டுகளாக தனி மாநிலம் கேட்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அசாமில் இந்த இருதரப்பினர் மத்தியில் அடிக்கடி மோதல்கள் நடைபெறும் பதற்றம் நிறைந்த மாவட்டங்களான கோக்ரஜார் மற்றும் பாக்சா ஆகிய மாவட்டங்களில் நேற்று மீண்டும் வன்முறை சம்பவங்கள் வெடித்தன. இதில் நேற்றுமுன்தினம் இரவு போடோ தீவிரவாதிகள் கோக்ரஜார் மற்றும் பாக்சா ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் புகுந்து அங்கு வீடுகளில் இருந்த கிராம மக்களை தரதரவென தெருவுக்கு இழுத்து வந்தனர். இதில் தீவிரவாதிகள் கிராம மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் நேற்று முன்தினம் சம்பவ இடத்திலேயே 10 பேர் பலியாயினர். மேலும் காயமடைந்தவர்களை கிராமத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.
இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் 13 பேர் இறந்தனர். இன்று காலை மேலும் 7 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 14 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனையடுத்து அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகளின் தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். பல்வேறு இன மக்களும் ஒற்றுமையாக வாழும் ஜனநாயக நாட்டை வகுப்புவாத சக்திகள் பிரித்தாள முயற்சி செய்கின்றன. அவர்களின் முயற்சி வெற்றி பெற அனுமதிக்கக் கூடாது. தற்போது அங்குள்ள நிலைமை குறித்து முதல்வர் தருண் கோகாயுடன் காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்தி வருகிறது’ என்று தெரிவித்துள்ளார்.அசாமில் வன்முறை சம்பவங்கள் நடந்த பகுதியில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment