Tuesday, May 27, 2014
புதுடெல்லி:பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மொத்தம் 29 கட்சிகள் உள்ளன. இவற்றில் 5 கட்சிகளுக்கு மட்டுமே மோடி அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 336 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பாஜ தலைவர் நரேந்திர மோடி நாட்டின் 15வது பிரதமராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் பாஜ மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த 45 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இதில் 4 கூட்டணி கட்சிகளுக்கு கேபினட் அமைச்சர் பொறுப்பும், ஒரு கட்சிக்கு இணை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
மற்ற 24 கட்சிகளுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.பாஜ கூட்டணியில் பாஜவுக்கு அடுத்தபடியாக 18 உறுப்பினர்களை வைத்துள்ள சிவசேனாவுக்கு ஒரேயொரு கேபினட் அமைச்சர் பதவி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஆனந்த் கீதே மத்திய அமைச்சராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு அடுத்த படியாக 16 உறுப்பினர்களை வைத்துள்ள தெலுங்கு தேசத்தை சேர்ந்த அசோக் கஜபதி ராஜ், 6 உறுப்பினர்களை வைத்துள்ள லோக்ஜனசக்தியின் ராம்விலாஸ் பஸ்வான், 4 உறுப்பினர்களை கொண்ட அகாலிதளத்தின் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஆகியோருக்கும் கேபினட் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
உ.பி.யில் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ள மற்றொரு கூட்டணி கட்சியான ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி தலைவர் உபேந்திரா குஷ்வாகாவுக்கு இணை அமைச்சர் பதவியே கிடைத்துள்ளது. தமிழகத்தில் பாஜவுடன் கூட்டணி அமைத்த பாமக, தேமுதிக உள்பட மொத்தம் 24 கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாதது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment