Tuesday, April 1, 2014

சிறுமி விபூசிகாவை மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்திலேயே தொடர்ந்து தங்கவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

Tuesday, April 01, 2014
இலங்கை::நீதிமன்ற உத்தரவின் பேரில் கிளிநொச்சி மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 13 வயதுடைய சிறுமி பாலேந்திரன் விபூசிகாவைத் தொடர்ந்து அங்கு தங்க வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் கிளிநொச்சி மாவட்ட சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரி வி.முத்துக்குமாருக்கு நேற்று திங்கட்கிழமை (31.03.14) உத்தரவிட்டார்.
 
அத்துடன், சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவருடைய உடமைகளை எடுத்துக் கொள்வதற்கு மாவட்ட நன்னடத்தை அதிகாரிக்கும், பொலிஸாருக்கும் நீதவான் அனுமதியளித்தார்.
 
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினையடுத்து, சந்தேகநபர் ஒருவர் ஒளிந்திருந்ததாகக் கூறப்படும் வீட்டிலிருந்து யுத்தக்காலத்தில் காணாமல் போனதாக கூறப்படும் இளைஞர் ஒருவரின் தாயான பாலேந்திரன் ஜெயக்குமாரியும், அவரது மகளும் கடந்த 13.03.14 அன்று கிளிநொச்சி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
தொடர்ந்து இவர்கள் இருவரும், கடந்த 14ம் தேதி கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 49 வயதுடைய பாலேந்திரன் ஜெயக்குமாரி, 3 மாதகாலம் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டு பூஸா தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார்.
 
அத்துடன் மகள் விபூசிகா வைத்தியச் சான்றிதழ் பெறுவதற்காக சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். மருத்துவச் சான்றிதழ் பெற்று சிறுமியினை கடந்த 17ம் தேதி கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் முன்னிலையில் மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரி ஆஜர்ப்படுத்தினார்.
இதன்போது, நீதவான் சிறுமியினை திங்கட்கிழமை (31.03.14) வரை கிளிநொச்சியிலுள்ள சைவச் சிறுவர் இல்லமான மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தில் ஒப்படைத்து பராமரிக்கும்படி சிறுவர் நன்னடத்தை அதிகாரிக்கு உத்தரவிட்டிருந்தார்.
 
அதன்படி மேற்படி சிறுமி கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் முன்னிலையில் மீண்டும் இன்று திங்கட்கிழமை (31.03.14) ஆஜர்ப்படுத்தப்பட்டபோதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

No comments:

Post a Comment