Saturday, March 29, 2014

இலங்கைக்கு எதிராக எத்தனை தடவைகள் பிரேரணைகள் கொண்டுவந்தாலும் நாம் அவற்றை ஏற்க போவதில்லை: ஜீ.எல்.பீரிஸ்!

Saturday, March 29, 2014
இலங்கை::இலங்கைக்கு எதிராக எத்தனை தடவைகள் பிரேரணைகள் கொண்டுவந்தாலும் நாம் அவற்றை ஏற்கவோ அழுத்தங்களுக்கு தலைசாய்க்கவோ போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். நாம் சரியான பாதையில் செல்வதால் சகல சவால்களுக்கும் முகம் கொடுப்பதற்கான மனோதைரியம் இலங்கைக்கு இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிராக ஜெனீவா மனித உரிமை பேரவையில் நிறைவெற்றப்பட்ட பிரேரணை குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு ஹம்பாந்தோட்டை பீகொக் ஹோட்டலில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இங்கு எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,

இலங்கைக்கு எதிரான பிரேரணையில் 10 வது சரத்தே மிகவும் பாரதூரமானது. இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்தும் பொறுப்பு இதனூடாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளைக்கு வழங்கப்படுகிறது.

இவர் பக்கசார்பாக ஒருதலைப்பட்சமாக செயற்படுபவர். யுத்தம் முடிந்து ஒரு வாரத்திலேயே யுத்தக் குற்றம் நடந்ததாக எதுவித விசாரணையும் இன்றி குற்றஞ்சாட்டியவர் முடிவை எடுத்து விட்டே இலங்கை குறித்து விசாரிப்பதால் இந்த சரத்தை ஏற்க முடியாது. இவர் இலங்கை வர நாம் தான் அனுமதி வழங்க வேண்டும். விரும்பியவாறு இங்கு வர முடியாது.

இந்த சரத்து தொடர்பில் தனியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆதரவாக 23 வாக்குகளும் எதிராக 14 வாக்குகளும் அறிவிக்கப்பட்டன. 10 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. இந்த பிரேரணையை 24 நாடுகள் ஏற்காததால் இதனை ஏற்க முடியாது.

மனித உரிமைப் பேரவையானது சகல நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இடம். ஆனால் இதிலுள்ள 13 ஆசிய நாடுகளில் 12 நாடுகள் அமெரிக்க பிரேரணைக்கு ஆதரவு வழங்கவில்லை. ஆபிரிக்க தீபகற்ப நாடுகளில் 13 இல் 4 நாடுகள் மட்டுமே பிரேரணையை ஆதரித்தன. எனவே இந்த பிரேரணையை செயற்படுத்த சரியான அடித்தளம் கிடையாது.

கடந்த 2 வருடங்களை விட இம்முறை இலங்கைக்கு சாதகமாகவே வாக்கெடுப்பு அமைந்தது. நாம் மேலைத்தேய நாடுகளுக்கு தலை சாய்ந்திருந்தால் இவ்வாறு அழுத்தம் வந்திருக்காது. தமக்கு தேவையானதை நிறைவேற்றுவதற்கு ஏற்றவாறே இந்த நாடுகள் விசாரணைகளை மேற்கொள்கின்றன. ஆப்கானிஸ்தான், லிபியா, ஈராக் போன்ற நாடுகளில் இவ்வாறான நிலைமைதான் ஏற்பட்டது. நாம் உள்ளக விசாரணையாகவே நல்லிணக்க ஆணைக்குழுவையும் காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவையும் நியமித்தோம்.

தமக்கு தேவையானவை செய்யவே விசாரணை நடத்த இவர்கள் முயல்கின்றனர். இலங்கைக்கு எதிரான பிரேரணை தொடர்பில் சூடான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றதோடு பிரேரணையால் மனித உரிமை பேரவை இரண்டாக பிரிந்தது. உறுப்பு நாடுகள் அமெரிக்க அழுத்தம் காரணமாகவே பிரேரணைக்கு சார்பாக வாக்களித்தன.

அமெரிக்காவின் அழுத்தத்திற்கு இந்தியா, குவைத், ஐக்கிய அரபு இராஜ்ஜியம் போன்ற நாடுகள் அடிபணியவில்லை. பிரேரணையில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள் கையொப்பமிட மறுத்தன.
எமது நாட்டில் ஜனநாயக வழியில் அரசியல் மாற்றம் ஏற்படுத்த முடியாது என்பதாலே எதிர்க்கட்சிகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் சர்வதேச சக்திகளுடன் இணைந்து ஆட்சி மாற்றம் ஏற்படுத்த இவ்வாறு முயல்கின்றன. எமது நாட்டு மக்களின் கருத்தறிய 6 மாதத்திக்கு ஒரு தடவை தேர்தல் நடத்தப்படுகிறது.

அமெரிக்க பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் அதற்கு எதிரான வாக்குகளே அதிகம், எனவே இதனை ஏற்க முடியாது. மக்களுக்கு தேவையானவற்றை எமது அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது. யாருடைய அழுத்தத்திற்கும் அடிபணிந்து நாம் எதனையும் செய்யவில்லை. நாம் சர்வதேச சமூகத்திற்கு அன்றி எமது மக்களுக்கே தலைசாய்க்கிறோம்.

சில நாடுகளுக்கு எதிராக பல தடவைகள் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன. எமக்கு எதிராக எத்தனை தடவை பிரேரணை கொண்டு வந்தாலும் நாம் அடிபணியப் போவதில்லை.

இரு தடவைகள் இலங்கைக்கு எதிராக வாக்களித்த இந்தியா இம்முறை ஆதரவாக வாக்களித்தது. இந்தியாவின் முடிவை வரவேற்கிறோம். இலங்கைக்கு எதிராக இவ்வாறு அழுத்தம் கொடுப்பது தவறு என இந்தியா சுட்டிக்காட்டியது. உலகில் எந்த நாட்டிலும் முழுமையாக பிரச்சினை தீர்க்கப்பட்டது கிடையாது.

அதற்கு சகல அவகாசம் தேவை. அமெரிக்க பிரேரணையினால் நாட்டுக்கு என்ன நன்மை கிடைக்கும்?

No comments:

Post a Comment