Saturday, February 01, 2014
இலங்கை::அமெரிக்கவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி வெளியுறவுச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
மூன்று நாள் விஜயமாக இலங்கை வந்துள்ள அவர், நேற்று கொழும்பில் அரசு தரப்பினர்கள் மற்றும் எதிர் தரப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இந்நிலையில், இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு இன்று காலை சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து யாழ். ஆயர் இல்லத்தில் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
அத்தோடு யாழிலுள்ள உதயன் பத்திரிகையின் அலுவலகத்திற்கும் சென்றதுடன், வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் சிவில் சமுகத்தினரையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இத்தகைய சந்திப்புக்களின்போது ஜெனிவா பிரேரணை மற்றும் இங்குள்ள தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விஜயத்தின் போது இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் சிசனும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment