Wednesday, February 26, 2014

சென்னையில் காங்கிரஸ்–நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மோதல்!

Wednesday, February 26, 2014
சென்னை::எண்ணூர் துறைமுகத்துக்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்காக மத்திய மந்திரி ஜி.கே.வாசனுக்கு பாராட்டு விழா இன்று நடந்தது. பாராட்டு விழாவுக்காக காங்கிரஸ் தரப்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அந்த போஸ்டரின் மீது நாம் தமிழர் கட்சியினர் சத்திய மூர்த்தி பவனை இன்று முற்றுகையிடப் போவதாக இன்று போஸ்டர் ஒட்டினார்கள்.
 
இதைப் பார்த்த காங்கிரஸ் தொண்டர்கள் ஆவேசமடைந்தனர். ராயப்பேட்டை விழாவில் திரண்டிருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு இந்த தகவல் பறந்தது.
 
இதையடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், கராத்தே தியாகராஜன், ரங்கபாஷ்யம், ஹரிகிருஷ்ண ரெட்டி, அகரம் கோபி, கொளத்தூர் கோபால், எஸ்.எம்.குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சத்திய மூர்த்தி பவன் முன்பு குவிந்தனர். நாம் தமிழர் கட்சியினருக்கு பதிலடி கொடுப்பதற்கு காங்கிரசார் காத்து நின்றனர்.
 
அண்ணாசாலையும் ஜி.பி.ரோடும் இணையும் இடத்தில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை அறிவுச் செல்வன் தலைமையில் தொண்டர்கள் திரண்டனர். அவர்கள் சத்திய மூர்த்தி பவனை நோக்கி சென்றனர். 100 அடிக்கு முன்னதாக வந்தபோது காங்கிரஸ் தொண்டர்கள் விரட்டினர்.
அங்கு வந்த போலீசார் தடுப்புவேலி அமைத்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் காங்கிரசாருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. காங்கிரஸ் அலுவலகம் முன்பு வைத்த தடுப்பு வேலியை அகற்று மாறு தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களை சமாதானப்படுத்தியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. தொடர்ந்து சத்திய மூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு உள்ளனர்.

No comments:

Post a Comment