Monday, February 3, 2014

நாளை மறுநாள் நாடாளுமன்றம் கூடுகிறது டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டம் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்!

Monday, February 03, 2014
புதுடெல்லி::நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது. நடப்பு மக்களவையின் கடைசி கூட்ட தொடர் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கூட்டத்தை சுமூகமாக நடத்த, டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று 2வது முறையாக ஆட்சி அமைத்தது. பிரதமராக மீண்டும் மன்மோகன் சிங் பொறுப்பேற்றார். கடந்த 10 ஆண்டுகளாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவையின் பதவி காலம் மே மாதம் 31ம் தேதியுடன் முடிகிறது. அதற்கு முன்னதாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. மக்களவை தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது. பிப்ரவரி 21ம் தேதி வரை இந்தக் கூட்டத்தொடர் நடைபெறும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் நாடாளுமன்றம் நடைபெறாது. இந்தக் கூட்டத் தொடரே 15வது மக்களவையின் கடைசி கூட்ட தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்ட தொடரில் இடைக்கால ரயில்வே மற்றும் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. புதிய அரசு பதவி ஏற்றதும் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

 தெலங்கானா மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர சீமாந்திரா பகுதி எம்பிக்கள் முடிவு செய்துள்ளனர். மேலும், நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த விடமாட்டோம் என்று எச்சரித்துள்ளனர். சீமாந்திரா பகுதி எம்பிக்களை அவையில் இருந்து வெளியேற்றி விட்டு, தெலங்கானா மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டதொடரின் போதும் சீமாந்திரா பகுதி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். கடைசி நாட்களில் அமளியில் ஈடுபட்டதாக 8க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு அவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. தெலங்கானா பிரச்னை மட்டுமன்றி விலைவாசி உயர்வு, ஆதார் அடையாள அட்டை திட்டத்தை அமல்படுத்துவதில் ஏற்பட்ட குழப்பங்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்பட பல முக்கிய பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் கிளப்ப முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ.வும் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற கூட்ட தொடரை அமைதியாக நடத்துவது குறித்து அனைத்து கட்சி தலைவர்களுடன் சபாநாயகர் மீராகுமார் டெல்லியில் இன்று ஆலோசனை நடத்துகிறார். இதில் பங்கேற்க பா.ஜ. உள்பட அனைத்துக் கட்சிகளுக்கும், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கமல்நாத் அழைப்பு விடுத்துள்ளார். ஐக்கிய முற்போக்கு அரசின் கடைசி பட்ஜெட் என்பதால் பல கவர்ச்சி திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வே பட்ஜெட்டிலும் கட்டண உயர்வு போன்ற அறிவிப்புகள் இருக்காது என தெரிகிறது.

நாடாளுமன்றத்தில் தற்போது 126 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. இதில் 72 மசோதாக்கள் மக்களவையில் நிலுவையில் உள்ளன. புதிய மக்களவை அமைக்கப்பட்டால் இந்த மசோதாக்கள் அனைத்தும் காலாவதியாகிவிடும். எனவே, இந்த கூட்ட தொடரிலேயே தெலங்கானா உள்பட ஒரு சில முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் (15வது மக்களவையில்) இதுவரை 165 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment