Monday, February 3, 2014

உள் விவகாரங்களில் தலையிட வேண்டியதில்லை: நிஷாவின் கருத்துக்கு வெளிவிவகார அமைச்சு ஆட்சேபம்!

Monday, February 03, 2014
இலங்கை::ஆசியாவின் தொன்மை மிக்க ஜனநாயகம் மற்றும் இறைமையுடைய நாடு என்ற வகையில், இலங்கையின் உள்ளூர் விவகாரங்களில் சர்வதேச சமூகம் தலையிட்டு பாடம் கற்பிக்க வேண்டிய அவசியமில்லையென வெளிவிவகார அமைச்சு நேற்று தெரிவித்தது.
 
அமெரிக்கா இலங்கைக்கெதிராக முன்கூட்டியே தீர்மானித்துள்ள செயற்பாடுகளுக்கு சாதகமளிக்க கூடிய வகையில், ஆதாரமில்லாமல் வெளியிட்டிருக்கும் அறிக்கையானது பொறுப்பற்ற செயன் முறையெனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
 
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், தனது இலங்கை விஜயத்தின் போது ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள கருத்துக்களை ஆட்சேபிக்கும் வகையில், வெளிவிவகார அமைச்சின் உத்தியோகப்பூர்வ பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, இலங்கை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவதனையும், அந்த அடிப்படையில் நாட்டிற்கு எதிரான தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்ற ஆசையிலேயே அமெரிக்காவும், அங்கிருந்து வருகை தரும் பிரதிநிதிகளும் செயற்படுகின்றனர் என்பதனை தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வாலின் இலங்கை விஜயம் உறுதிப்படுத்தியுள்ளது.
 
இவரது கருத்துக்களின்படி, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல், ஏற்றுக்கொள்ள முடியாத வகையிலே சமய ரீதியிலான குற்றச்சாட்டுக்கள் அல்லது நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறும் செயற்பாடுகளில் பூரணப்படுத்தப்படாத தகவல்கள் அனைத்தும் ஆதாரமற்றவை.
 
இலங்கைக்கு வருகை தந்திருக்கும் அமெரிக்க பிரதிநிதி, 2008ம் ஆண்டில் சிவில் சமூக நிறுவனமொன்றினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகளை வைத்துக்கொண்டு இலங்கையில் சுமார் 40 ஆயிரம் பேர் வரையிலானோர் காணாமல் போயிருப்பதாக கூறுவது முட்டாள்தனமான செயற்பாடாகும்.
 
சகித்துக்கொள்ள முடியாதபடியாக சமய ரீதியான குற்றச்சாட்டுக்களை அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதன் மூலம், இவை நாட்டின் வழக்கமான செயற்பாடாக காட்ட முயற்சித்துள்ளார். குறிப்பிட்ட பகுதிகளில் வாழும் ஒரு சில சமூகங்களைச் சேர்ந்த மக்களின் வன்முறைச் சம்பவங்களினாலேயே இவை ஏற்பட்டதென்பதே பொதுவாக அடையாளம் காணப்பட்ட விடயமாகும்.
இவற்றில் ஒருசில சம்பவங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஏனையவை நட்பு ரீதியாகவே இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன. இந்நிலையில், இது தொடர்பான முழுக் குற்றச்சாட்டையும் அரசாங்கம் மீது சுமத்த முயற்சிப்பது நியாயமற்ற செயலாகும். மேலும், இவை அரசியல் நோக்கத்துடன் முன்வைக்கப்பட்ட பாரதூரமான குற்றச்சாட்டுக்களாகவே நாம் கருதுகின்றோம்.
 
அமைதியானதும், ஒற்றுமையானதுமான நாட்டைக் கொண்டு நடத்த வேண்டுமென்பதே இலங்கை அரசாங்கத்தின் விருப்பமாகும். ஆனால், அமெரிக்கா, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கொண்டுவரவுள்ள பிரேரணை நாட்டின் இலக்குகளை அடைவதற்கான ஊக்கத்திற்கு பங்கம் ஏற்படுத்தும்.
 
அத்துடன், இத்தகைய செயற்பாடு நாட்டிற்குள்ளும், வெளியிலும் பல்வேறு சமூகத்தினரிடையே எதிர்ப்பை மாத்திரமே சம்பாதிக்க முடியுமென்பது நன்கு அறிந்த விடயமே. இதேவேளை, உணர்வுகளுடன் கூடிய செயற்பாடான நல்லிணக்கச் செயற்பாடுகளிலும் இது பாதிப்பை ஏற்படுத்தும். இலங்கை சவால்களை சந்திக்கும்போது அதற்கு ஆதரவளிக்கும் நாடுகளால் சர்வதேச சமூகத்திலும் பிரிவினையை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
 
முப்பது வருடகால யுத்தத்தின் பின்னர், குறுகிய காலமான நான்கரை வருடங்களுக்குள் இலங்கையின் வளர்ச்சி மற்றும் அதற்காக எதிர்நோக்கிய பிரச்சினைகள் தெளிவாக அடையாளம் காணப்படவில்லை. இருப்பினும், இலங்கை அரசாங்கம் நாட்டு மக்களுக்காக இயலுமானவரை சிறப்பானதையே பெற்றுக்கொடுக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment