இலங்கை::இலங்கையின் 66வது சுதந்திர தினம்இன்றாகும் (04). இதனையொட்டிய தேசிய நிகழ்வுகள் கேகாலை நகரில் வெகுவிமர்சையாக கொண்டாட ஏற்பாடாகியுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரது பாரியார் சகிதம் இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிப்பார். தேசிய நிகழ்வுகளை முன்னிட்டு கேகாலை நகரின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக 600 போக்குவரத்து பொலிஸார் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் அதிகமான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சுதந்திர தின நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தலைமையில் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு முன்னெடு த்துள்ளது.
இதேவேளை எமது இலங்கை சுதந்திரமடைந்த தினத்தை அனைவரும் கொண்டாடும் வகையில் அரச மற்றும் தனியார் அலுவலகங்கள், வீடுகள், கட்டடங்கள் மற்றும் வாகனங்களில் தேசியக் கொடியை பறக்க விடுமாறும் அமைச்சர் செனவிரட்ன பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
தேசிய தின நிகழ்வுகள் இன்று காலை 8.00 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கேகாலை நகரில் நடைபெறவுள்ளதால், காலை 7 மணி முதல் கொழும்பு - கண்டியூடாக போக்குவரத்து வழிகளில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி கனரக வாகனங்கள் குறித்த காலப் பகுதிக்குள் கேகாலை நகருக்கூடாக செல்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.
மேலும் பஸ் மற்றும் ஏனைய வாகனங்கள் கொழும்பிலிருந்து யட்டேகொட, இம்புல்கஸ்தெனிய ஊடாக கண்டி செல்லவும் கண்டியிலிருந்து வரும் வாகனங்கள் கரடுமன சந்தியூடாக பொல்கஹவெல செல்லவும் மாற்று வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இன்றைய நிகழ்விற்கு மூவாயிரம் பேர் அழைக்கப்பட்டிருப்பதனால் நெருக்கடிகளை தவிர்த்துக்கொள்ளும் வகையில் இன்றைய தினம் காலை 8 மணிக்கு முன்பாகவே தமக்குரிய ஆசனங்களில் அமர்ந்துகொள்ளுமாறும் பொதுநிர்வாக அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
சுதந்திர தின தேசிய நிகழ்வினை முன்னிட்டு கேகாலை நகரில் நேற்றும் ஒத்திகைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
நாட்டில் வாழும் அனைத்து இன மக்களுக்குமென விசேட சமய ஆராதனைகள் இன்று காலை நடத்தப்படுகின்றன.
காலை 6.30 மணிக்கு கேகாலை வெவலதெனிய விகாரைவில் பெளத்த சமய ஆராதனைகளும், கேகாலை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோயிலில் இந்து சமய ஆராதனைகளும், கேகாலை மொஹியத்தீன் ஜும்மா பள்ளிவாசலில் இஸ்லாமிய சமய ஆராதனைகளும், கேகாலை புனித மரியாள் தேவாலயத்தில் உரோமன் கத்தோலிக்க ஆராதனைகளும், கேகாலை புனித யோவான் தேவாலயத்தில் கிறிஸ்தவ ஆராதனைகளும் நடை பெறவுள்ளன.
காலை 7.30 மணிக்கு டீ. எஸ். சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு முன்னால் மலரஞ்சலி செலுத்தப்படும். அதனைத் தொடர்ந்து நிகழ்வுகள் யாவும் காலை 8 மணி முதல் ஆரம்பமாகும்.
காலை 8.33 மணிக்கு சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹீபால ஹேரத் அவரது பாரியாருடன் வருகை தருவார். 8.35 மணிக்கு சப்பிரகமுவ மாகாண ஆளுநர் வி. ஜே. மு. லொக்குபண்டார பாரியார் சகிதம் வருகை தருவார். 8.30 மணிக்கு பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சர் விஜய தஹநாயக்க வருகை தருவார்.
8.37 மணிக்கு அமைச்சர் டபிள்யூ. டி. ஜே. செனவிரத்ன அவரது பாரியார் சகிதம் வருகை தருவார். 8.39 மணிக்கு பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அவரது பாரியார் சகிதமும் 8.40 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அவரது பாரியார் சகிதமும் 8.41 மணிக்கு பிரதமர் டி. எம். ஜயரட்ன அவரது பாரியாருடனும் வருகை தரும் வகையில் நிகழ்ச்சி நிரல் ஏற்பாடாகியுள்ளது.
காலை 8.45 மணிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரது பாரியார் சிரந்தி ராஜபக்ஷ சகிதம் வருகை தருவார். அவர்களை பிரதமர் டி. எம். ஜயரட்ன, அமைச்சர் ஜோன் செனவிரட்ன மற்றும் பிரதியமைச்சர் விஜய தஹநாயக்க ஆகியோர் வரவேற்பர்.
முரசொலி முழக்கத்துடன் ஜனாதிபதியவர்கள் கொடிக்கம்பம் அருகில் அழைத்துச் செல்லப்பட்டு பின் காலை 8.50 மணியளவில் ஜனாதிபதியவர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைப்பார்.
அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படும்.
110 பாடசாலை மாணவ மாணவிகள் தேசியக் கீதத்தைப் பாடுவர். ஜனாதிபதி அவர்களை பிரதம பாதுகாப்பு பதவிநிலை உத்தியோத்தர், முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் விசேட மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டதை தொடர்ந்து பாடசாலை மாணவிகள் ஜயமங்கள கீதம் பாடுவார்கள்.
இலங்கையின் சுதந்திரம், தேசிய ஒருமைப்பாடு, இறைமை ஒற்றுமை என்பவற்றின் நிலைப்பாட்டின் பொருட்டு உயிர் நீத்த சகல தேசாபிமானிகளையும் நினைவு கூருவதற்காக 02 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்படும்.
ஜனாதிபதிக்கான 21 மரியாதைப் பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்படும். காலை 9.15 மணியளவில் ஜனாதிபதியின் உரை நிகழ்த்தப்படும்.
மரியாதை அணிவகுப்பில் 1400 இலங்கை தரைப்படையினர், 250 இலங்கை கடற்படையினர், 250 இலங்கை வான் படையினர், 250 இலங்கை பொலிஸார், 250 சிவில் பாதுகாப்பு படையினர், 325 ‘>சிய பயிலிளவல் படையணி, 300 இளைஞர் படையணி ஆகியன பங்குபற்றவுள்ளன.
கலை, கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், கல்வியமைச்சு ஆகியவற்றின் ஏற்பாட்டில் விஷேட நடனங்கள் இடம்பெறவுள்ளன. 768 நாட்டியக் கலைஞர்களின் பங்குபற்றுதலுடன் அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பல நடனங்கள் நடைபெறும்.
இவற்றைத் தொடர்ந்து ஜனாதிபதி மற்றும் ஏனைய அதிதிகள் அங்கிருந்து புறப்பட்டதன் பின்னர் நண்பகல் 12 மணிவரை சைத்திய வீதியில் கலங்கரை விளக்கத்திற்கு அருகில் இலங்கை கடற்படையினரால் தேசத்திற்காக 25 மரியாதை பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்படும்.
கண்டியில்.....
(எம். ஏ. அமீனுல்லா)
(எம். ஏ. அமீனுல்லா)
இலங்கையின் 66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கண்டி மற்றும் கண்டியை அண்மித்துள்ள பிரதான நகரங்களில் சுதந்திர தின வி¡¡ நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த வகையில் கண்டி போகம்பரை விளையாட்டுத் திடலில் இன்று (4( காலை கண்டி மாவட்டத்துக்கான விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அது போன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் சபையின் கண்டி நகர்களையும் கண்டி மீரான் மக்காம் ஜும்ஆ பள்ளிவாயல் நிருவாக சபையும் இணைந்து நடாத்தும் சுதந்திர தின விழா கண்டி மீரான் மக்காம் பள்ளி வாயலிலும் அது போன்று மடவளை பஸார் வை. எம். எம். ஏ. ஏற்பாடு செய்துள்ள விழா நிகழ்ச்சிகள் மடவளை மதீனா தேசிய கல்லூரியில் அஷ்ரஃப் கேட்போர் கூடத்திலும் இன்று காலை 9.00 மணியளவில் நடைபெற ஏற்பாடாகியுள்ளன.
மேலும் இன்றைய தினம் மடவளை பசாரில் இடம்பெறவுள்ள இடம்பெறவுள்ள சுதந்திர தின விழாவையடுத்து நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டத்தின் வகையில் சுமார் 300 க்கும் அதிகமான தென்னம் கன்றுகள் இலவசமாக வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
சிலாபத்தில்
(உடப்பு நிருபர்)
(உடப்பு நிருபர்)
இலங்கையின் 66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிலாபம் நகர விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டம் பிரமாண்டமான முறையில் நடாத்த ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன.
முப்படையினர்களின் அணிவகுப்பு மரியாதைகளும் ஆயிரம் மாணவர்கள் பங்குபற்றும் அணிவகுப்பும் நடைபெற உள்ளது.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி வெளிவிவகார அமைச்சரும் சிலாபம் தொகுதி ஸ்ரீல. சு. க. பிரதான அமைப்பாளருமான நியோமல் தலைமையில் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நடைபெறும்.
இந்நிகழ்வில் சிலாபம் நகர பிதா பிரசன்னா கிளரி பர்னாந்து, மாகாண சபை அமைச்சர்கள், நகர சபை உறுப்பினர்களும் உயர் அரச அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள்.
களுத்துறையில்.....
(பேருவளை விசேட நிருபர்)
(பேருவளை விசேட நிருபர்)
66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு களுத்துறை மாவட்ட பிரதான நிகழ்வு 4ம் திகதி களுத்துறை மாவட்ட செயலகத்தில் நடைபெறும்.
போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தலைமையில் நடைபெறும் நிகழ்வில் மாவட்டத்திலுள்ள அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சர்வமத தலைவர்கள் பலரும் பங்குபற்றுவர்.
மாவட்ட செயலாளர் யு. டி. ஸி. ஜயலால் இதற்கான ஏற்பாடுகளை மேற் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment