இந்தோனேசியாவில் மவுன்ட் சினபங் எரிமலை வெடித்ததன் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.
சுமத்ரா தீவின் வடக்கில் உள்ள இந்த எரிமலை, கடந்த 4 மாதங்களாகவே சீறிக்
கொண்டிருக்கிறது. இதையடுத்து, 5 கி.மீ.க்கு உட்பட்ட அதன் சுற்றுப்புற
கிராமங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கிருந்து
வெளியேறினர். அவர்கள் தற்காலிக கூடாரங்கள், பள்ளிகள் மற்றும் அரசு
கட்டிடங்கள் உள்ளிட்ட பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
எரிமலையின் சீற்றம் சற்று குறைந்து காணப்பட்டதால், முகாம்களில்
தங்கியிருந்தவர்களில் 14 ஆயிரம் பேர் தங்கள் இருப்பிடத்துக்கு
திரும்புவதற்கு அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தனர்.
இந்நிலையில், 2,600 மீட்டர் உயரம் கொண்ட அந்த எரிமலை சனிக்கிழமை முதல்
மீண்டும் தொடர்ந்து வெடித்துச் சிதறி வருகிறது. இதில் பலர் சிக்கி
உயிரிழந்துள்ளனர். இதையடுத்து சனிக்கிழமை மீட்புப் பணியில் ஈடுபட்ட தேசிய
பேரிடர் தணிப்புத் துறையினர், 14 பேரின் சடலங்களையும் தீக் காயங்களுடன் 3
பேரையும் மீட்டனர்.
ஞாயிற்றுக்கிழமையும் மீட்புப் பணி நடைபெற்றது. இதில் எரிமலைக்கு 3
கி.மீ. தொலைவில் ஒருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக மீட்புப் பணிக்கு தலைமை
வகிக்கும் கர்னல் அசெப் சுகர்னா தெரிவித்தார். இதுபோல காயமடைந்து சிகிச்சை
பெற்று வந்த மற்றொரு கல்லூரி மாணவர் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரி
தெரிவித்தார். இதன்மூலம் உயிரிழந் தவர்கள் எண்ணிக்கை 16 ஆக
அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் உள்ளூர் தொலைக் காட்சி செய்தியாளர் ஒருவரும் எரிமலை
வெடிப்பைக் காண்பதற்காக சென்றிருந்த ஒரு ஆசிரியர் மற்றும் 4 பள்ளி
மாணவர்களும் அடங்குவர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என பேரிடர்
தணிப்பு அமைப் பின் செய்தித் தொடர்பாளர் சுடோபோ புர்வோ நுக்ரோஹோ
தெரிவித்தார்.
No comments:
Post a Comment