Tuesday, January 28, 2014

தமிழக மீனவர் பிரச்னை குறித்து இலங்கையில் விரைவில் இறுதிகட்ட பேச்சுவார்த்தை மீனவர் பிரதிநிதி தகவல்!

Tuesday, January 28, 2014
நாகை::தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லும்போது, எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். வலைகள் அறுத்து எறியப்படுவதுடன், மீன்களையும் அள்ளிச் செல்கின்றனர். மேலும், மீனவர்களையும் சிறைபிடித்து செல்லும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், தமிழக மற்றும் இலங்கை மீனவ பிரதிநிதிகள் சந்தித்து பேச ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகளை தமிழக மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, சென்னையில் உள்ள மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தில் தமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் இடையேயான பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால், மீன்வளத்துறை செயலாளர் விஜயகுமார், இயக்குனர் முனியநாதன் உள்ளிட்ட 12 அதிகாரிகளும், தமிழக மீனவர்கள் சார்பில் 25 பேரும், இலங்கை மீனவர்கள் 10 பேரும், இலங்கை அரசு சார்பில் மீன்வளம் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் தலைமை இயக்குனர் நிமல் ஹெட்டியராச்சி, அமைச்சக ஆலோசகர் சுபசிங்கே உள்ளிட்ட 8 பேரும் பங்கேற்றனர்.
இந்த பேச்சுவார்த்தை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. இந்த பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாக நடந்தது. பயனுள்ளதாகவும், முன்னேற்றம் தரும் வகையிலும் இருந்தது என இருதரப்பினரும் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், இரு நாட்டு அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, அதன்பிறகுதான் நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். பேச்சுவார்த்தையில் பங்கேற்ற நாகை அக்கரைப்பேட்டை மீனவ பஞ்சாயத்தை சேர்ந்த வீரமுத்து கூறியதாவது:

 சென்னையில் நடந்த பேச்சுவார்த்தை திருப்தி தரும் வகையில் இருந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, இலங்கை அரசுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பின், எங்களை இலங்கைக்கு அழைப்பதாக கூறியுள்ளனர். அங்கு இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். அதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என நம்புகிறோம். இந்த பேச்சுவார்த்தைக்கு இலங்கை மீனவர்கள் 45 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளனர். இந்த 45 நாட்களில் தமிழக மீனவர்கள் யாரும் எல்லை தாண்டி வரக் கூடாது என நிபந்தனை விதித்துள்ளனர். இரட்டை மடி, சுருக்கு மடி வலைகளை தமிழக மீனவர்கள் பலர் பயன்படுத்துவதால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றை எப்போதும் பயன்படுத்தக் கூடாது என்றும் கூறினர். இதற்கு நாங்கள் ஒப்புக் கொண்டோம்.

அத்துடன், இழுவை வலையையும் பயன்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தினர். அதற்கு தமிழக மீனவ பிரதிநிதிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், இதையும் பயன்படுத்துவதில்லை என ஒப்புக் கொள்ளப்பட்டது.இவ்வாறு வீரமுத்து கூறினார்.

No comments:

Post a Comment