Friday, January 31, 2014
இலங்கை::இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம்: ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா, பிரித்தானியா முயற்சி!
இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரவுள்ள தீர்மானத்தை ஆதரிக்கும்படி, பேரவையின் உறுப்பு நாடுகளிடம் அமெரிக்காவும், பிரித்தானியாவும் இணைந்து அழுத்தம் கொடுக்கவுள்ளன.
அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான இராஜாங்க திணைக்களத்தின் உதவி செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், சிறிலங்காவில் இருந்து லண்டனுக்குச் சென்று இதுதொடர்பான நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நிஷா தேசாய் பிஸ்வாலுடன், பிரித்தானியாவைத் தளமாக கொண்ட புலிகளுக்கு நெருக்கமான மூத்த பிரித்தானிய அதிகாரிகள், இதுதொடர்பாக சந்தித்துப் பேசவுள்ளனர். அதேவேளை, இந்த தீர்மானத்தை ஆதரிக்கும்படி அமெரிக்காவும், பிரித்தானியாவும் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக, இலங்கை அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இதற்கிடையே, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும், காமன்வெல்த் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளிடம், அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்கும்படி கோருவதற்கு பிரித்தானியா முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும், கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment