Wednesday, January 29, 2014
சென்னை::பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை நாளை 30-ம்
தேதி கூடுகிறது. முதல் நாளன்று மரபுப்படி கவர்னர் ரோசைய்யா சபையில் உரை
நிகழ்த்துகிறார். தமிழக சட்டமன்ற கூட்டம் நாளை ( 30_ம் தேதி) கவர்னர்
உரையுடன் தொடங்குகிறது. இந்த கூட்டத்தை தலைமை செயலகத்தில் உள்ள சட்டமன்ற
பேரவை மன்றத்தில் கவர்னர் கூட்டியிருக்கிறார். ஆண்டின் முதல் கூட்டம்
எப்போதும் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி நாளை சட்டசபையில்
கவர்னர் ரோசைய்யா பகல் 12 மணிக்கு உரை நிகழ்த்துவார். முன்னதாக
நேற்றுமுன்தினம் சபாநாயகர் தனபால் கவர்னரை சந்தித்து சட்டசபை உரைநிகழ்த்த
வருமாறு முறைப்படி அழைப்பு விடுத்தார். அதை கவர்னர் ஏற்றுக்கொண்டார்.
சட்டசபையில் உரை நிகழ்த்தும்போது அவர், அரசின் சாதனைகள், புதிய திட்டங்கள்
ஆகியவற்றை அறிவிக்கக்கூடும். இந்த சட்டசபை கூட்டம் குறித்து சட்டசபை
செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்டிருந்த அறிக்கையில் தமிழக சட்டசபை கூட்டத்தை
கவர்னர் ரோசைய்யா வரும் 30_ம் தேதி பகல் 12 மணிக்கு தலைமை செயலகத்தில்
பேரவை மண்டபத்தில் கூட்டியிருக்கிறார் என்றும் அன்று நன்பகல் 12 மணிக்கு
கவர்னர் உரை நிகழ்த்த உள்ளார் என்றும் குறிப்பிட்டிருந்தார். பாராளுமன்ற
தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. அதற்கு முந்திய கூட்டத்தொடர்
இது என்பதால் இக்கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேலும் வாரிசு சண்டை தி.மு.க.வில் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இந்த
கூட்டம் நடைபெறுகிறது. தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் மு.க.
அழகிரி நீக்கப்பட்ட நிலையில் அவரது தந்தையும் தி.மு.க. தலைவருமான
கருணாநிதியும் அழகிரி பற்றி பரபரப்பான பேட்டிகளை அளித்து வருகிறார்.
இப்படிப்பட்ட பரபரப்பான அரசியல் சூழ்நிலையில்தான் நாளை சட்டசபை கூடுகிறது.
தமிழக சட்டசபை கூட்டம் கடந்த அக்டோபர் மாதம் 23_ம் தேதி முதல் 6 நாட்கள்
நடைபெற்றது. அதன் பிறகு நவம்பர் 12_ம் தேதி சட்டசபையின் சிறப்புக்கூட்டமும்
நடைபெற்றது. அப்போது இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டை இந்தியா
முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். இந்தியா சார்பில் யாரும் மாநாட்டில்
பங்கேற்கக்கூடாது என்று வலியுறுத்தி தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா
கொண்டுவந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது நினைவிருக்கலாம்.
மேலும் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரை முடிந்தவுடன் அ.தி.மு.க.
பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும்
வகையில் முழுவீச்சில் களத்தில் இறங்க உள்ளார். 40 பாராளுமன்ற தொகுதிகளிலும்
அ.தி.மு.க.வெற்றிபெற வேண்டும். அதற்காக தொண்டர்கள் களப்பணி ஆற்ற வேண்டும்
என்று ஏற்கனவே முதல்வர் தனது கட்சியினர் கட்டளையிட்டிருந்தார். அவரும்
தமிழகம் முழுவதும் மின்னல்வேக பிரசாரம் செய்ய உள்ளார். இப்படிப்பட்ட
சூழலில் நாளை கூடும் சட்டமன்ற கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக
கருதப்படுகிறது.
No comments:
Post a Comment