Monday, December 30, 2013

இலங்கையில் இந்திய தூதரகங்களுக்கு ஆபத்து – பாதுகாப்பை பலப்படுத்துமாறு புதுடெல்லி கோரிக்கை!

Monday, December 30, 2013
இலங்கை::இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் ஆபத்து இருப்பதால்,  இலங்கையில் உள்ள தமது தூதரகங்கள் மற்றும் இராஜதந்திர மையங்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 26ம் நாள் இந்திய வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங் இதுதொடர்பாக  இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பங்களாதேசின் இஸ்லாமிய அரசியல் அமைப்பான ஜமாயத் இஸ்லாமி அமைப்பின் தலைவரான அப்துல் காதர் முல்லா தூக்கிலிடப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கிலேயே, கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும், ஏனைய பகுதிகளில் உள்ள தூதரகப் பணியகங்கள் மீது இஸ்லாமியத் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று இந்தியா அச்சம் வெளியிட்டுள்ளது.

இலங்கை தவிர, மேலும் பல தெற்காசிய நாடுகளிலுள்ள இந்தியத் தூதரக நிலைகளும் தாக்கப்படும் ஆபத்து இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இதுபற்றிய புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதையடுத்தே, இலங்கை  உள்ளிட்ட பல தெற்காசிய நாடுகளின் அரசாங்கங்களுக்கு, தமது தூதரகங்களின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை கொழும்பில் தூதரகத்தைக் கொண்டுள்ள இந்தியாவுக்கு, கண்டி, யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை என் மூன்று இடங்களில் துணைத் தூதரகங்கள் இருக்கின்றன.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கை அதிகாரிகள், வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் பணியாளர்களுக்கும் போதியளவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக, தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்புக்கு ஒரு தொகை பாதுகாப்பு அதிகாரிகளை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1971ம் ஆண்டு இந்தியாவின் உதவியுடன் நடத்தப்பட்ட பங்களாதேஸ் விடுதலைப் போரின் போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயற்பட்ட அப்துல் காதர் முல்லா உள்ளிட்ட பல இஸ்லாமிய தலைவர்கள், போர்க்குற்றங்களைப் புரிந்தது நிரூபிக்கப்பட்டதையடுத்து, பங்களாதேசின் அனைத்துலக விசாரணைத் தீர்ப்பாயம் தண்டனைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment