Monday, December 30, 2013

பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கெதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிவிப்பு குறித்து அரசு அலட்டி கொள்ளாது: நிமல்சிறிபால டி சில்வா!

Monday, December 30, 2013
இலங்கை::பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கெதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கருத்து தெரிவிப்பதொன்றும் புதிய விடயமல்ல. கூட்டமைப்பு திட்டமிட்ட வகையில் தெரிவுக்குழு வுக்கெதிராக அறிவிப்புக்களை விடுப்பது வழக்கமான செயற்பாடாயிற்று. இவை குறித்து அரசாங்கம் ஒரு போதும் அலட்டிக்கொள்ள மாட்டாதென சபை முதல்வரும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் தலைவருமான நிமல்சிறிபால டி சில்வா நேற்று  தெரிவித்தார். 
கூட்டமைப்பினர் மட்டுமன்றி எந்த ஒரு அரசியல் கட்சி பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கெதிராக கருத்து தெரிவித்தாலும் அதனை பொருட்படுத்தாது திட்டமிட்டவகையில் எமது பணிகள் முன்னெடுக்கப்படும். அதில் மாற்றமில்லை யெனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உறுதியாக கூறினார்.
 
இதேவேளை சுயாதீனமான குழு என்ற வகையில் பாராளுமன்ற தெரிவுக் குழுவின் செயற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட மாட்டாதெனவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.இதற்கிடையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அரசாங்கத்தின் உறுப்பினர்களை மாத்திரம் கொண்ட பாராளுமன்ற தெரிவுக் குழுவின் நம்பகத் தன்மையில்லையெனவும் இதற்கு மூன்றாத்தரப்பு மத்தியஸ்தம் அவசியமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா, கருத்துக்களை கூவது அவரவர் உரிமை எனினும் தெரிவுக் குழுவின் செயற்பாடுகளை முடக்கும் வகையிலான கருத்துக்களுக்கும் அறிவிப்புகளுக்கும் அஞ்சி அரசாங்கம் ஒருபோதும் அதன் செயற்பாடுகளிலிருந்து பின்வாங்கமாட்டாது எனவும் அவர் தெரிவித்தார். பாராளுமன்ற தெரிவுக் குழுவின் சாட்சியாளர்களாக முன்வைக்கப்படும் கருத்துக்குளும் ஆலோசனைகளும் சிபாரிசுக்குட்படுத்தப்படும் எனக் கூறிய அமைச்சர் அதன் நிகழ்ச்சிநிரல் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து தகவல்கள் வெளியிடப்படமாட்டாதெனவும் குறிப்பிடப்பட்டது.

No comments:

Post a Comment