Saturday, December 28, 2013

கல்முனை இஸ்லாமாபாத் பகுதி தமிழர் பிரச்சினைகளை தீர்க்க கல்முனை முதல்வர் நடவடிக்கை!

Saturday, December 28, 2013
இலங்கை::கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் பிரதேசத்தை அண்மித்துள்ள தமிழ் பகுதியில் நிலவி வருகின்ற பிரச்சினைகள் குறித்து கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
 
இது தொடர்பிலான விசேட சந்திப்பொன்று, கல்முனை மாநகர சபை முதல்வர் செயலகத்தில்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 
கல்முனை பௌத்த விகாராதிபதி ரன்முத்துகல சங்கரட்ன தேரர் தலைமையில் இந்து கோவில் தர்மகத்தாக்கள் மற்றும் கிறிஸ்தவ போதகர் உள்ளிட்ட தமிழ் பிரமுகர்கள் பலர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இதன்போது இஸ்லாமாபாத் பிரதேசத்தை அண்மித்துள்ள தமிழ் பகுதியில் நிலவி வருகின்ற பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டு- சில தீர்மானங்களும் எட்டப்பட்டன.
 
குறிப்பாக இஸ்லாமாபாத் வீட்டுத் திட்ட பகுதியில் இருந்து வெளியிடப்படுகின்ற கழிவுகளால் தமிழ் பகுதி மக்கள் நீண்ட காலமாக எதிர்கொண்டு வருகின்ற அசௌகரியங்களை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு மாநகர ஆணையாளர் மற்றும் பொறியியலாளர் போன்றோருடன் பிரத்தியேகமாக ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதியளித்தார்.
 
அத்துடன் இங்கு முன்வைக்கப்பட்ட ஏனைய சில கோரிக்கைகள் குறித்து, தான் சாதகமாகப் பரிசீலிப்பதாகவும் காலப்போக்கில் அவற்றை ஒவ்வொன்றாக நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
 
முதல்வரின் இந்த அறிவிப்பை வரவேற்றுப் பாராட்டிய தமிழ் பிரமுகர்கள், தாம் உங்களை நம்புவதாகவும் நீங்கள் மேற்கொள்ளும் வேலைத் திட்டங்கள் அனைத்துக்கும் தாம் பக்கபலமாக இருப்போம் எனவும் குறிப்பிட்டனர்.
இதன்போது இத்தமிழ் பகுதியில் நிலவி வருகின்ற பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் முதல்வர் நிசாம் காரியப்பர் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
 
இக்கலந்துரையாடலில் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, திண்மக் கழிவகற்றல் பிரிவுப் பொறுப்பாளர் என்.எம்.எம்.அக்ரம், முதல்வரின் பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம்.பாறுக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment