Saturday, December 28, 2013

பாதிப்பிலிருந்து மீண்டெழ துடிக்கும் வெறி கிளிநொச்சி மக்களிடம் காணப்படுகிறது- சந்திரகுமார் எம்.பி!

Saturday, December 28, 2013
இலங்கை::கிளிநொச்சி மக்களிடம் பாதிப்பிலிருந்து மீண்டெழ வேண்டும் என்கின்ற வெறி காணப்படுகிறது. அதனால்தான் ஒரு குறுகிய காலத்திற்குள் இந்த மாவட்டம் பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளர். நேற்று(27) கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தின் 2013 கலாச்சார விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இங்கே உரையாற்றிய வவுனியா மாவட்ட தமிழ்ச் சங்கத்தலைவர் தமிழ்மாமணி சிவகுமாரன் அவர்கள், சிறுவர்களின் முகங்களில் மலர்ச்சியும், மகிழ்ச்சியும் காணப்படுவதாகவும், இது அவர்களின் உள்ளத்திலிருந்து வெளிப்படுகின்றது. எனவே, கிளிநொச்சி மாவட்டம் பௌதீக ரீதியாக மட்டுமல்ல, ஏனைய அனைத்து துறைகளில் வளர்ச்சி கண்டுள்ளமையின் வெளிப்பாடே அது எனத்தெரிவித்தார்.
 
உண்மை அதுதான் கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றத்தின் பின்னர் ஏற்பட்ட பாரிய அபிவிருத்தியே இந்த நிலைமைக்கு வழிவகுத்தது. இன்று கிளிநொச்சி மாவட்டம் பற்றி அனைவரும் வியந்து பேசும் அளவுக்கு இங்கு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
 
இதற்காக அரசியல் தரப்புகள், அதிகாரிகள், மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் என அனைவரும் உழைத்திருக்கின்றார்கள் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், கல்வித்துறையில் கிளிநொச்சி மாவட்டம் தேசிய ரீதியில் இந்த குறுகிய காலத்திற்குள் பல சாதனைகளை படைத்திருகிறது. கடந்த கால பெறுபேறுகள் அதனை வெளிப்படுத்துகிறது. மேலும் கலை, இலக்கியம், விளையாட்டு என பல துறைகளிலும் இந்த மாவட்ட மாணவர்கள் சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர்.
 
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கடந்த இரண்டு நவராத்திரி விழாவிற்காக, கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து புனித சென்திரோசா மற்றும் அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலய மாணவிகளை அழைத்துச்சென்று நடன நிகழ்வினை அரங்கேற்றியிருந்தோம். அந்த நிகழ்வினை பார்த்த சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற பணியாளர்கள் என அனைவரும் வியந்து பாராட்டியிருந்தார்கள். அவ்வளவு சிறப்பாக கிளிநொச்சி மாணவிகளின் நிகழ்வு அமைந்திருந்தது. இது ஒரு இயல்பான நல்ல சூழல் இங்கு தோற்றுவிக்கப்பட்டுள்ளதன் வெளிப்பாடே எனக்குறிப்பிட்ட அவர், கிளிநொச்சி மாவட்டம் தனி மாவட்டமாக பிரிந்து சில வருடங்களிலேயே யுத்தத்தின் பாதிப்புக்களை சுமக்க தொடங்கி விட்டது.
 
கடந்த கால யுத்தம் வடக்கில் அதிகம் பாதித்தது. கிளிநொச்சி மாவட்டத்தையே இதனால் அபிவிருத்தியின் பயன்களை கிளிநொச்சியினால் அனுபவிக்கமுடியாது போய்விட்டது. இது கிளிநொச்சியினை அனைத்து துறைகளிலும் பின்தங்கிய மாவட்டமாக வைத்திருந்தது. ஆனால், தற்போது இந்த நிலைமை மாற்றப்பட்டு, கடந்த நான்கு ஆண்டுகளாக கிளிநொச்சி எல்லாத்துறைகளிலும் சாதனைகளை நிகழ்த்திவருகின்ற மாவட்டமாக மாறிவருகிறது. இந்த நிலைமை தொடர்ந்தும் முன்னோக்கிச்செல்ல வேண்டும்.
 
கிளிநொச்சி ஒரு தனித்துவமான கலாச்சார அம்சங்களை கொண்ட மாவட்டம், இது மறைந்துவிட கூடாது. இதனை பேணி பாதுகாக்க வேண்டும். அதற்காக எல்லோரும் ஒத்துழைத்து செயற்பட வேண்டும் எனத்தெரிவித்த அவர், சிறப்பான ஒரு கலாச்சார விழாவினை நடத்தியமைக்காக பிரதேச செயலாளர் கலாச்சார உத்தியோகஸ்தர் மற்றும் பிரசேதச செயலக உத்தியோகஸ்தர்கள் என அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.
 
இந்நிகழ்வில், தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு கரை எழில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். கரைச்சி பிரதே செயலர் நாகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், வணக்கத்துக்குரிய அருட்தந்தை யோசுவா, கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதிகேதீஸ்வரன், மேலதிக அரச அதிபர் ஸ்ரீநிவாசன், மாவட்டச்செயலக திட்டப்பணிப்பாளர் மோகனபவன், வவுனியா தமிழ்ச் சங்கத்தலைவர் தமிழ்மாமணி தமிழருவி சிவகுமாரன், குருகுலம் சைவ சிறார் இல்ல தலைவர் இராசநாயகம், கரைச்சி கலாச்சார உத்தியோகஸ்தர் ரஜீவன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், கலைஞர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment