Wednesday, December 4, 2013

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் விசேட பிரதிநிதி ஆளுநரை சந்தித்து கலந்துரையாடல்!

Wednesday, December 04, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் விசேட பிரதிநிதி சலோகா பியானி தலைமையிலான குழுவினர் வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி அவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் 03 டிசெம்பர் 2013 அன்று சந்தித்து கலந்துரையாடினார்.
 
மேலும் 2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின் அப்பிரதேச மக்களின் மீளக்குடியமர்வு, அபிவிருத்தி, மக்களின் வாழ்வாதார மேம்பாட்டு, தொழில் வாய்ப்புக்கள், மனித உரிமை மேம்பாடு ஆகியவற்றிற்கு அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களும் அவர்களின் அரசாங்கமும் மேற்கொண்ட திட்டங்களை ஆளுநர் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் வட மாகாணத்தின் தற்போதைய நிலை தொடர்பாகவும் ஆளுநர் விபரித்தார்..
 
வட மாகாண சபையின்  கடமைகள் குறித்தும் ஆளுநருக்கும், முதலமைச்சருக்குமிடையில் காணப்படும் தொடர்புகள் குறித்தும் இச்சந்திப்பில் விசேட பிரதிநிதி கேட்டறிந்து கொண்டதாக வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். 
 
இது மட்டுமன்றி உள்நாட்டு யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்கள் பற்றியும் ஐ.நா. விசேட பிரதிநிதி கேட்டறிந்ததாக ஆளுநர் குறிப்பிட்டார். இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்த அரசாங்கம் முன்னெடுத்த செயற்பாடுகள் குறித்தும், அவர்களுக்கு அரசாங்கத்தால் ஏற்படுத்திக்கொடுக் கப்பட்டிருக்கும் வசதிகள் குறித்தும் ஐ.நா. விசேட பிரதிநிதிக்கு விளக்கிக் கூறியதாக ஆளுநர் குறிப்பிட்டார்.
 
யுத்தம் காரணமாக பெற்றோரை இழந்த பிள்ளைகள் பற்றியும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது. இவ்வாறான பிள்ளைகளை பராமரிக்க தனியான அலகொன்று உருவாக்கப்பட்டு அதன் ஊடாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் பற்றியும் அவருக்கு விளக்கமளித்ததாக வட மாகாண ஆளுநர் கூறினார்.
 
காணிப்பிரச்சினைக்குத் தீர்வுகாண அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள், காணிக் கச்சேரியின் செயற்பாடுகள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர் என்ற ரீதியில் மாகாணத்தில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் குறித்து விளக்கமளித்ததுடன், அரசின் செயற்பாடுகள் குறித்து ஐ.நா. விசேட பிரதிநிதி மகிழ்ச்சி தெரிவித்ததாகவும் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி மேலும் தெரிவித்தார்.
 
ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கும் ஐ.நா. விசேட பிரதிநிதி இடம்பெயர்ந்த மக்களையும் சந்தித்துள்ளார். உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பான தகவல்களைத் திரட்டி அறிக்கையொன்றை வெளியிட விருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 
ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன், பிரதி பிரதம செயலாளர் (திட்டமிடல்) திரு.இ.உமாகாந்தன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment