Thursday, December 5, 2013

பீகாரில் நக்சல்கள் கண்ணிவெடி தாக்குதல் போலீஸ் பலி 8 ஆக உயர்வு!!

Thursday, December 05, 2013
அவுரங்காபாத்:பீகாரில் நக்சல்கள் கண்ணி வெடியில் சிக்கி பலியான போலீஸ்காரர்கள் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து 200 கி.மீட்டர் தொலைவில் அவுரங்காபாத் மாவட்டம் உள்ளது. இது நக்சல் ஆதிக்கம் உள்ள பகுதியாகும். நக்சல் வேட்டையில் மத்திய போலீசாருடன் மாநில போலீசாரும், பீகார் மிலிட்டரி போலீஸ் என்ற அதிரடி படையும் இணைந்துள்ளது.

 நேற்று முன்தினம் இங்குள்ள நபி நகரிலிருந்து தன்வேடா பகுதிக்கு மாநில போலீசாரும், மிலிட்டரி போலீசும் வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலை ஓரத்தில் நக்சல்கள் மறைத்து வைத்திருந்த கண்ணி வெடியில் போலீஸ் வாகனம் சிக்கி வெடித்து சிதறியது. இதில் தன்வாடா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அஜய்குமார், 5 போலீசார் மற்றும் ஜீப் டிரைவர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து இந்த இடத்துக்கு மத்திய போலீஸ் படை விரைந்தது.

 கண்ணிவெடி தாக்குதல் நடைபெற்ற இடத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது புதர் மறைவில் ஒரு உடல் கண்டு எடுக்கப்பட்டது. அவர் பீகார் மிலிட்டரி போலீஸ் படையை சேர்ந்த சஞ்சய் குமார் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து கண்ணிவெடி பலி 8 ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் பலியான காவலர்கள் உடல் நேற்று அவுரங்காபாத் கொண்டு வரப்பட்டு உரிய அரசு மரியாதைகளுடன் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தாக்குதல் நடத்திய இடத்தை சுற்றிய பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டிருப்பதாக பீகார் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி பரத்வாஜ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment