Wednesday, December 04, 2013
சேலம்::ஏற்காடு தொகுதியில் 10 மணி நிலவரப்படி 18 சதவீத வாக்குகள் பதிவாகின.
12 மணி நிலவரப்படி 43 சதவீத ஓட்டுகள் பதிவானது.
சின்னகவுண்டாபுரம், மின்னாம்பள்ளி, செல்லியாம்பாளையம், வெள்ளாளக்குண்டம் ஆகிய வாக்கு சாவடிகளில் 12 மணி நிலவரப்படி 55 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
ஏற்காடு தொகுதி அதிமுக எம்எல்ஏ பெருமாள் இறந்ததை தொடர்ந்து, அந்த தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. திமுக சார்பில் மாறன், அதிமுக சார்பில் மறைந்த பெருமாளின் மனைவி சரோஜா உள்பட 11 பேர் போட்டியிடுகின்றனர். முதல்வர் ஜெயலலிதா, திமுக பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். 2ம் தேதி மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.
இதைத் தொடர்ந்து, தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 290 வாக்குச் சாவடிகளிலும் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. வருவாய்த்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட 4 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். வாக்குச்சாவடிகளில் உள்ளூர் போலீசார், சிறப்பு காவல் படையினர், துணை ராணுவப்படையினர் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மொத்தம் 269 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடவடிக்கைகள் வெப்கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் ‘வெப்காஸ்டிங்‘ முறையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதனை வேட்பாளர்களின் பிரதிநிதிகள் பார்த்தனர். இணையதள இணைப்பு தர முடியாத 21 வாக்குச்சாவடிகளில் வீடியோ கேமரா மூலம் வாக்குச்சாவடி நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்பட்டன. இந்த பகுதியில் மத்திய அரசு ஊழியர்கள் நுண் பார்வையாளர்களாக செயல்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
காலை 7.30 மணிக்கு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வேட்பாளர்களின் ஏஜென்ட்கள் முன்பாக மாதிரி வாக்குப்பதிவை தேர்தல் அதிகாரிகள் நடத்தினர். சேலம் உடையாப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 7 வாக்குச்சாவடி மையங்களும், மாசிநாயக்கன்பட்டியில் 8 வாக்குச்
சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு என தனித்தனி வரிசை அமைக்கப்பட்டிருந்தது. காலை 7 மணிக்கே வாக்காளர்கள் அதிகளவில் குவிந்தனர். இவர்கள் சுமார் ஒரு மணி நேரம் நீண்டவரிசையில் காத்திருந்து, வாக்குகளை ஆர்வமுடன் பதிவு செய்தனர்.
இந்த தேர்தலில் முதன் முறையாக வாக்களித்த சேலம் உடையாப்பட்டியை சேர்ந்த பிஇ மாணவி சவுந்தர்யா கூறுகையில், `புதியதாக சேர்க்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் எனது பெயர் இடம் பெற்றது. இன்று காலை 7 மணிக்கே என் அம்மா ராஜாமணியுடன் வந்து வரிசையில் காத்திருந்து வாக்களித்துள்ளேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான் வாக்களித்த வேட்பாளர் வெற்றி பெற்று மக்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
திமுக வேட்பாளர் மாறன் அவரது சொந்த ஊரான பூவனூரில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அதிமுக வேட்பாளர் சரோஜா பாப்பநாயக்கன்பட்டி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். தொகுதி முழுவதும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
தேர்தல் பிரசாரத்தின் போது திமுக பிரமுகர் மரணமடைந்த கருமந்துறை பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். டிஐஜி சஞ்சய் குமார், எஸ்பி சக்திவேல் ஆகியோர் இன்று காலை அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
கருமந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். பெண்கள் வாக்களிக்க ஆர்வத்துடன் குவிந்துள்ளனர். காலை 11 மணியளவில் ஏற்காடு தொகுதியில் 43 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நோட்டா பட்டன்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 12வது பட்டனாக நோட்டா எனப்படும் ‘யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை‘ என்ற பட்டன் பொருத்தப்பட்டுள்ளது. தமிழக தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக இந்த தேர்தலில் ‘நோட்டா‘ பட்டன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மதுவிலக்கு கொண்டு வர வலியுறுத்தியும், நெடுஞ்சாலைக்கு நிலம் கொடுத்த பிரச்னையிலும் ‘நோட்டாÕ பட்டனில் வாக்களிக்குமாறு சிலர் பிரசாரம் செய்திருந்தனர். இதனால், ‘நோட்டா’விலும் அதிக வாக்குகள் பதிவாகும் எனத் தெரிகிறது.


No comments:
Post a Comment