Friday, November 01, 2013
இலங்கை::வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுமாறு வட மாகாண சபையினால் கோரிக்கை விடுக்க முடியாது. அது மாகாண சபை விடயதானத்துக்கு அப்பாற்பட்டது. மாகாண சபை விடயதானம் என்ன என்பதைக்கூட கூட்டமைப்பினால் புரிந்துகொள்ள முடியாமல் உள்ளது என்று ஜாதிக ஹெல உறுமயவின் பிரதிச் செயலாளரும் மேல் மாகாண அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
இராணுவம் எங்கு இருக்கவேண்டும் என்பதனை நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் ஜனாதிபதியே தீர்மானிப்பார். அதில் எவரும் தலையிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுவது அரசாங்கத்தின் கடமை என்று வட மாகாண சபை முதலமைச்சர் ஓய்வுபெற்ற நீதியரசர் விக்கினேஸ்வரன் தெரிவித்திருந்தமை குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
உதய கம்மன்பில இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்
வட மாகாண சபையை கைப்பற்றியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறான கோரிக்கைகளை முன்வைக்கும் என்பது எமக்குத் தெரியும். எனவேதான் வடக்குத் தேர்தலுக்கு முன்னதாக 13 ஆவது திருத்தச் சட்டத்தின் சில அதிகாரங்களை நீக்குமாறு வலியுறுத்திவந்தோம்.
எவ்வாறெனினும் தற்போதைய நிலைமையில் கூட்டமைப்பினர் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரங்களை உடனடியாக கோர மாட்டார்கள். மாறாக மத்திய அரசாங்கம் எப்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இழக்கின்றதோ அன்று கூட்டமைப்பினர் தமது வேலையை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.
அந்த நேரத்தில் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை செய்யக்கூடிய நிலையில் மத்திய அரசாங்கம் இருக்காது. அந்த நேரத்தில் எல்லாமே கால தாமதமாகியிருக்கும். அந்த நேரத்தில் சிந்திப்பதில் பலன் இருக்காது. இதனை அரசாங்கம் தற்போதே உணர்ந்துகொள்ளவேண்டும்.
இதேவேளை 13 ஆவது திருத்தச் சட்டத்தில் இல்லாத விடயதானத்துக்கு அப்பாற்பட்ட விடயங்களையே வட மாகாண முதலமைச்சர் தனது முதல் உரையில் கூறியுள்ளார். அதாவது வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுமாறு வட மாகாண சபையினால் கோரிக்கை விடுக்க முடியாது. அது மாகாண சபை விடயதானத்துக்கு அப்பாற்பட்டது.
இராணுவம் எங்கு இருக்கவேண்டும் என்பதனை நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் ஜனாதிபதியே தீர்மானிப்பார். அதில் எவரும் தலையிட முடியாது. இது மாகாண சபையுடன் தொடர்புறாத விடயம்.
இந்நிலையில் மாகாண சபை விடயதானம் என்ன என்பதைக்கூட கூட்டமைப்பினால் புரிந்துகொள்ள முடியாமல் உள்ளது. முன்னாள் நீதியரசர் ஒருவர் முதலமைச்சராகியும் மாகாண சபை விடயதானத்துக்கு உட்பட்ட விடயங்கள் எவை என்பது குறித்து தெரியாமல் இருக்கின்றார்.
இது இவ்வாறு இருக்க மாகாண சபைக்குரிய ஆளுநரை நியமிப்பது ஜனாதிபதியாகும். ஜனாதிபதியின் பிரதிநிதியாகவே ஆளுநர் நியமிக்கப்படுகின்றார். ஜனாதிபதி தனக்கு தேவையானவரையே வட மாகாண சபையின் ஆளுநராக நியமிப்பார்.
ஆளுநரை விலக்கவேண்டுமாயின் அதற் கென அரசியலமைப்பில் ஒரு முறைமை காணப்படுகின்றது. அதனை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கலாம். அதனைவிடுத்து ஆளுநரை விலக்கவேண்டும் என்று கோருவதில் அர்த்தம் இல்லை. சட்டம் தெரிந்தவர்கள் வடக்கு மாகாண சபை க்கு நியமிக்கப்பட்டும் இந்த விடயம் தெரி யாமல் உள்ளனர்.
No comments:
Post a Comment