Thursday, November 28, 2013
சென்னை::சென்னையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், இந்திய அணிக்காக டெஸ்ட், ஒரு நாள், 20,20 போட்டிகளில் ஆடியுள்ளார். 28 வயதான தினேஷ் கார்த்திக் கடந்த 2007ம் ஆண்டு தனது சிறுவயது தோழியான நிதிகா வன்ஜரா என்பவரை திருமணம் செய்தார். இதன் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றனர்.
இந்நிலையில், தினேஷ் கார்த்திக்கிற்கும் பிரபல ஸ்குவாஷ் வீராங்கனையான தீபிகா பாலிகலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. 21 வயதான தீபிகா பாலிகலும் சென்னையை சேர்ந்தவர்தான். இவர் இந்தியா சார்பில் பல்வேறு சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார். மத்திய அரசின் உயர்ந்த விருதான அர்ஜூனா விருதையும் பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு ஜிம் ஒன்றில் தினேஷ் கார்த்திக்கும், தீபிகாவும் சந்தித்துள்ளனர். முதல் சந்திப்பில் காதல் மலரவில்லை என்றாலும் இருவரும் ஒரே உடற்பயிற்சி நிபுணரிடம் ஆலோசனைகளை பெற்று உடற்பயிற்சி செய்து வந்துள்ளனர். நட்பாக பழக ஆரம்பித்த இவர்களுக்குள் நண்பர்கள் வாயிலாக காதல் அரும்பியுள்ளது. இதை தொடர்ந்து இருவரும் பல்வேறு இடங்களில் ஒன்றாக சுற்றித்திரிந்தனர். இவர்களது விவகாரம் வீட்டிற்கு தெரிந்ததும் திருமணத்திற்கு பச்சைகொடி காட்டியுள்ளனர்.
ஓராண்டு காலம் காதலித்து வந்த தினேஷ் கார்த்திக் , தீபிகா ஜோடிக்கு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் இருதரப்பை சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டனர். நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், திருமண தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதற்கிடையே அடுத்த ஆண்டு இவர்களது திருமணம் நடைபெறும் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment