Thursday, November 28, 2013
சேலம்::ஏற்காடு சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் சரோஜாவுக்கு ஓட்டு கேட்டு முதல்வர் ஜெயலலிதா இன்று பிரசாரம் செய்தார். ஏற்காடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 4ம் தேதி நடக்கிறது. அதிமுக வேட்பாளராக சரோஜா, திமுக வேட்பாளராக மாறன் போட்டியிடுகின்றனர். மற்ற முக்கிய கட்சிகள் போட்டியிடாததால், அதிமுக, திமுக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அதிமுக வேட்பாளர் சரோஜாவை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரான முதல்வர் ஜெயலலிதா இன்று தீவிர பிரசாரம் செய்தார்.
முன்னதாக, அவர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு காலை 9.47 மணிக்கு வந்தார். அங்கிருந்து காலை 10.17 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் சேலம் கிளம்பினார். காலை 11 மணிக்கு அவர் சேலம் வந்து சேர்ந்தார். சேலம் அம்மாப்பேட்டை ஹோலிகிராஸ் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் அவர் வந்திறங்கினார். அவரை அதிமுக வேட்பாளர் சரோஜா, நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர், அங்கிருந்து ஏற்காடுக்கு பிரசார வேனில் ஜெயலலிதா புறப்பட்டார். அப்பகுதியில் சாலையின் இருபுறமும் காத்திருந்த தொண்டர்களை பார்த்து அவர் கையை அசைத்தபடி சென்றார். பகல் 12 மணியளவில் மின்னாம்பள்ளி என்ற இடத்தில் ஜெயலலிதா தனது பிரசாரத்தை தொடங்கினார். மின்னாம்பள்ளியை தொடர்ந்து வெள்ளாளகுண்டம் பிரிவு ரோடு, வாழப்பாடி, பேளூர், நீர்முள்ளிக்குட்டை, கூட்டாத்துப்பட்டி, வலசையூர், அயோத்தியாப்பட்டணம், உடையாப்பட்டி ஆகிய 8 இடங்களில் ஜெயலலிதா பிரசாரம் செய்வதற்காக மேடை அமைக்கப்பட்டிருந்தது. எனினும், அவர் எல்லா இடங்களிலும் பிரசார வேனில் இருந்தபடியே பேசினார்.
அவர் பேசுகையில் அதிமுக அரசின் பல்வேறு சாதனைகளை குறிப்பிட்டார். மாலை 5 மணி வரை தீவிர பிரசாரம் மேற்கொள்ளும் முதல்வர் ஜெயலலிதா, மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். ஏற்காடு தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் செய்வதையொட்டி, சேலம் மாவட்ட எஸ்.பி. சக்திவேல் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 700 போலீசார் வரவழைக்கப்பட்டு, ஜெயலலிதா செல்லும் வழிநெடுகிலும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.
No comments:
Post a Comment