Friday, November 01, 2013
இலங்கை::பொதுநலவாய அரச தலைவர்கள் உச்சி மாநாட்டினை நேரடி ஒலி, ஒளிபரப்புச் செய்ய மற்றும் தகவல் சேகரிக்கவுள்ள உள் நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கென நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய ஊடக மத்திய நிலையம் பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக ஊடக மற்றும் தகவல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பொதுநலவாய மாநாடு தொடர்பிலான செய்தி சேகரிப்பிற்கென ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஊடக மத்திய நிலையத்தின் வசதிகள் குறித்து அமைச்சர் கெஹெலிய நேற்று மேற்பார்வை செய்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொதுநலவாய அரச தலைவர் மாநாட்டின் ஊடாக மற்றும் பிரசார உபகுழு மற்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சின் கண்காணிப்பின் கீழ் பொதுநலவாய அமைப்பின் லண்டன் அலுவலகத்தின் அறிவுறுத்தல்களுக்கமைய இந்த ஊடக மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
தகவல் சேகரிக்கும் பொருட்டு வெளிநாடுகளிலிருந்து சுமார் 500 ஊடகவியலாளர்கள் இலங்கை வரவுள்ளனர். இந்த ஊடக மத்திய நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த சுமார் ஆயிரம் ஊடகவியலாளர்கள் பங்குபற்றுவதற்கான வசதிகள் உண்டு.
செய்தியாளர் மாநாடு நடத்தல், தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ள நவீன புகைப்பட கருவிகள் உள்ளிட்ட சகல தொழில்நுட்ப வசதிகளும் உண்டு. இந்த மத்திய நிலையமானது நாட்டின் தனித்துவத்தை வெளிக்காட்டும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
பொதுநலவாய மாநாட்டில் ஊடகம் மற்றும் பிரசார நடவடிக்கைகளே முக்கியமான அம்சங்கள் என சுட்டிக்காட்டிய அமைச்சர், இலங்கை பற்றி தவறான கருத்துக்கள் வெளிவந்துள்ள நிலையில், இலங்கைக்கு வரும் வெளிநாட்டு அரச தலைவர்கள் குறித்த தகவலை உலக நாடுகளுக்கு அறிவிக்கும் வகையில் நவீன தொழில் நுட்பங்கள் இங்கு பொருத்தப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.
குறித்த ஊடக மத்திய நிலையம் நவம்பர் 11 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரையில் பொதுநலவாய மாநாட்டிற்கென விசேட அடையாள அட்டை வழங்கப்பட்டவர்களுக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
இந்த மத்திய நிலையத்தினை மேற்பார்வை செய்வதற்காக அமைச்சருடன் ஊடக அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத், ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் மொஹான் சமரநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment