Thursday, October 31, 2013
இலங்கை::நாட்டில் அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக சிங்கள மக்களே உள்ளனர். சிங்களவர்களை பகைத்துக் கொண்டு அரசாங்கத்தினால் எதையும் செய்யமுடியாது. நாட்டில் சமாதானமும் அமைதியும் நிலவவேண்டும் என்பதற்காகவே சிறுபான்மையினரை ஆதரித்துக் கொண்டு செயற்படுகின்றோம் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சி சிறுபான்மையினரை ஆதரித்து ஆட்சி அமைக்கலாம் என்ற நினைப்பில் செயற்படுகின்றது. இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் வீழ்ச்சிக்கும் அவர்களின் அர்த்தமற்ற கொள்கைகளே காரணம் எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியது.
இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர கருத்துத் தெரிக்கையில்:-
இலங்கையில் சிங்கள மக்களை பகைத்துக் கொண்டு எதிர்க்கட்சியால் அரசாங்கத்தை அமைக்கமுடியாது. பெரும்பான்மையினமான சிங்களவர்களே இந்த நாட்டின் ஆட்சியினை தீர்மானிக்கின்றனர். இலங்கையில் உள்ள சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்தாலும் சிங்கள மக்களின் வாக்குகள் அதிகமானதாகவே உள்ளன. இதனை புரிந்து கொண்டதனால் தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கம் உறுதியான ஒரு நிலையில் பலமான ஆட்சியினை அமைத்து அரசாங்கத்தினை நடத்துகின்றது.
எனினும் ஐக்கிய தேசியக்கட்சி சிறுபான்மை மக்களின் ஆதரவினைப் பெற்று அவர்களினூடாக ஆட்சியினை அமைக்கலாம் என நினைக்கின்றது. அதன் காரணத்தினாலேயே இன்று வடக்கையும், வடக்கின் முதலமைச்சரைப் பற்றியும் புகழாரம் சூட்டி வடக்கின் உரிமைகளைப் பற்றி பேசிக் கொண்டுள்ளது.
இன்று வடக்கில் அமைதியும் சமாதானமும் நிலவுகின்றது. 30 வருடங்களாக இருந்த நிலைமை மாறி இன்று வடக்கிலுள்ள அனைத்து மக்களும் சுதந்திரமாக செயற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எனினம் இதனை குழப்பி மீண்டுமொரு போர் சூழலினை உருவாக்கவே ஐக்கிய தேசியக்கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முயல்கின்றன.
உண்மையிலேயே இலங்கை இன்று அழுத்தங்களை சந்திப்பதற்கும் அன்று யுத்தம் ஒன்று ஏற்படுவதற்கும் ஐக்கிய தேசியக்கட்சியும் புலிகள் ஆதரவு தமிழ் பிரிவினைவாத கட்சிகளுமே காரணமாகும். அப்பாவி மக்களையும் சர்வதேச சக்திகளையும் குழப்பி நாட்டை பிரிப்பதற்கு இவ் கட்சிகள் துணை நிற்கின்றன.
பல்லாயிரக்கணக்கான இராணுவ வீரர்களையும் சொத்துக்களையும் இழந்து பெற்ற வெற்றியையும் பாதுகாத்து வரும் நாட்டினையும் புலிகள் ஆதரவு பிரிவினைவாதிகளின் கைகளில் கொடுக்க நாம் தயாராகவில்லை. யார் எவ்வாறான கருத்துக்களை முன்வைத்தாலும் ஜனாதிபதியின் முடிவு இறுதியானது.
வடக்கில் இருந்து கொண்டு விக்கினேஸ்வரன் எதை குறிப்பிட்டாலும் எந்தக் கட்டளைகளை பிறப்பித்தாலும் மத்திய அரசாங்கம் செவிமடுக்கப் போவதில்லை. நாட்டிற்கும் மக்களுக்கும் எது சிறந்ததோ அதையே அரசாங்கம் செய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment