Thursday, October 31, 2013
இலங்கை::வடமாகாண சபை வெளிநாட்டுச் சக்திகளின் உதவியுடன் தனி இராட்சியம் நோக்கிச் செல்ல முயன்றால் வடமேல் மாகாண சபை அதற்கு எதிராக செயற்படும் என வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். மாகாண சபையின் மாதாந்த அமர்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்:-
வடமாகாண சபையை உருவாக்கியது ஜனநாயக ரீதியில் வெற்றியாகும். அதேபோல் வடமேல் மாகாண சபையில் நாம் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வெற்றி கண்டுள்ளோம். எதிர்காலத்தில் எமக்கு ஒரு இலக்கு இருக்க வேண்டும்.
மாகாணம் முழுவதும் கிராமிய மக்களின் அபிவிருத்தி தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மக்கள் சேவையின் போது கட்சிபேதமில்லாமல் செயற்படவேண்டும். அந்த வகையில் குருணாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஒரே விதமாக அபிவிருத்தி செய்யப்படும்.
அனைத்து அபிவிருத்தித்திட்டங்களும் மக்களுக்கு நன்மை பயப்பதாக அமைய உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும். சுற்றுலாத்துறை கற்பிட்டி பிரதேசத்தில் அபிவிருத்தி செய்யப்படும்.
இதேவேளை இப்பகுதியில் சிறுநீரக நோய் அதிகரித்து வருவதால் அதைத் தடுத்து தூய குடிநீர் வழங்கும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இதேவேளையில் இப்பகுதியில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தி திடமான சமுதாயமொன்று உருவாக்க வழியமைக்கப்படவுள்ளதுடன் பாடசாலையில் இருந்து விலகும் மாணவர்களுக்கு தொழிற் பயிற்சிகள் வழங்கப்படும். மேலும் காட்டு யானைகளை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் ஜே.சீ. அலவத்துவல உரையாற்றுகையில், மாகாண சபைகள் பயனற்றவை எனக்கூறுவது மக்களுக்குச் செய்யும் அகெளரவமாகும், புதிய முதல்வர் வடமேல் மாகாணத்திற்கு உரித்தான கொள்கைகளை உருவாக்க வேண்டும். 25 வருட கால வரலாற்றைக் கொண்ட வடமேல் மாகாண சபைக்கு போதிய கொள்கைச் சாசனங்கள் இல்லாமை கவலைக்குரியது. எதிர்க்கட்சி என்ற வகையில் மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை நாம் வரவேற்போம்.
வடமேல் மாகாண கல்வித்துறையில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. சுகாதாரத்துறை சீரழிந்து போயுள்ளது. 75 வீதமான மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். ஆனால் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. விவசாய ஓய்வூதியம் தொடர்பாக கவனமெடுக்கவேண்டும். சிறுகைத்தொழில் அபிவிருத்தி செய்ய வேண்டும். சிறுநீரக நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
வடமேல் மாகாண அபிவிருத்தி தொடர்பாக வடமேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களே தீர்மானம் எடுக்க வேண்டும். ஏனையவர்கள் தலையிடுவதை தடுக்க புதிய வடமேல் மாகாண முதல்வர் முன் வரவேண்டும் என்றார்.
No comments:
Post a Comment