Wednesday, October 2, 2013

கத்தி, ரத்தம் இல்லா யுத்தம் -இன்று காந்திஜி பிறந்த தினம்!!!

Wednesday, October 02, 2013
சென்னை::வயதான அவரிடம் வசீகரத் தோற்றம் இல்லை; கையில் ஆயுதம் இல்லை; ஜாதி, மத பின்புலம் இல்லை... ஆனாலும் ஆங்கிலேய அரசு அவரைக் கண்டு அஞ்சியது. இந்தியாவே அவரது கட்டளைக்கு கீழ்படிந்தது. காரணம் அவரது நேர்மை மற்றும் துணிவு. அந்த மகான் தான், காந்திஜி.

இன்று உலகில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து விட்டன. அமைதி தேடி இறைவனது ஆலயம் சென்றாலும் அங்கும் அமைதியின்மை ஏற்படுகிறது. இதற்கெல்லாம் ஒரே தீர்வு "அகிம்சை'. இதை சொன்னதோடு மட்டுமல்லாமல், செயல்படுத்தி இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தார் ஒரு முதியவர். அவர் தான் மக்களால் "தேசத்தந்தை' என அழைக்கப்படும் காந்தியடிகள். இவரது பிறந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்று உலகுக்கு தேவை, இவர் பின்பற்றிய "அகிம்சை'.

மகாத்மா காந்தி, 1869 அக்., 2ம் தேதி, குஜராத்தின் போர்பந்தர் நகரில் பிறந்தார். 1883ல், 13 வயதில் கஸ்தூரிபாயை திருமணம் செய்தார். பள்ளிக் கல்வியை முடித்தபின், உயர் கல்விக்காக 1888ல் லண்டன் சென்றார். அங்கு சட்டப்படிப்பு முடித்து, இந்தியா திரும்பினார். சில காலம் மும்பையில் வக்கீலாக பணியாற்றினார்.

தென் ஆப்ரிக்காவில் 21 ஆண்டு : 1893ல், வேலைக்காக தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கு ஆங்கிலேயரின் நிறவெறி அதிகமாக இருந்தது. வெள்ளையர் அல்லாத காரணத்தால், காந்தியும் பலமுறை பாதிக்கப்பட்டார். அங்குள்ள இந்தியர்களையும், கறுப்பின மக்களையும் ஒன்றினைத்து "சத்தியாகிரகம்' எனும் அறவழிப் போராட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர்களின் நிலையை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்ட காந்திஜி, 21 ஆண்டுகளுக்குப் பின், 1915ல் நாடு திரும்பினார்.

சுதந்திர போராட்டம் : காங்., கட்சியில் சேர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். ரவீந்திரநாத் தாகூர், கோபாலகிருஷ்ண கோகலே, நேரு, ஜின்னா, வல்லபாய் படேல், அம்பேத்கார் உள்ளிட்ட பல தலைவர்களுடன் இணைந்து, சுதந்திர போரட்டத்தை நடத்தினார். சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம், தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு போன்ற அறப் போராட்டங்களின் மூலம் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடினார். இறுதியில் 1947 ஆக., 15ல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது.
இந்தியா சுதந்திர தினத்தை கொண்டாடிய வேளையில், காந்திஜி இந்தியா - பாக்., பிரிவினையை கண்டு மனம் வருந்தினார். உண்ணாவிரதம் மேற்கொண்டார். 1948 ஜன., 30ம் தேதி, வழிபாடு முடிந்து வெளியே வந்த போது, நாதுராம் கோட்சே என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது நினைவு தினம், உலக அகிம்சை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

சிறு வயதிலேயே... : காந்தி சிறுவனாக இருந்தபோது, அவரை அண்ணன் அடித்து விட்டார். அடுப்பில் வேலையாக இருந்த அன்னையிடம் காந்தி புகார் செய்தார். அன்னை சலிப்புடன், ""அண்ணன் அடித்தால் நீ திரும்ப அடியேன்? இங்கே வந்து சும்மா, சும்மா புகார் செய்யாதே'' என கூறினார். அதற்கு காந்தி, '"அம்மா பெரியவனான அண்ணனை அடிக்கச் சொல்கிறீர்களா?'' என்று கேட்டார். ஒரு கணம் திடுக்கிட்ட அன்னை, 'ஒரே வீட்டில் பிறந்தவரிடையே வித்தியாசம் தேவையில்லை விளையாடும்போது' என்றார். அதற்கு காந்தி, "'அம்மா, நான் அண்ணனைத் திருப்பி அடிப்பதை விட அண்ணனை என்னை அடிக்காமல் செய்துவிடுவது நல்லது இல்லையா?'' என்றார். அந்தச் சிறுவயதிலேயே அஹிம்சையை உணர்ந்து, அண்ணலாக வளர்ந்தார். பிறர்க்கின்னா செய்யாத நெறி, இதுவே அஹிம்சை முறை. "நம்மை பொறுமையிழக்கச் செய்யும் அன்றாட வாழ்க்கையில் இதை கடைப்பிடிக்க முடியுமா?' என்ற கேள்விக்கு காந்தியடிகள் கூறுவது, "'மனிதனின் இயல்பிலேயே விலங்குக்கு குணம் கலந்திருக்கிறது. அதை உள்ளே அடக்கி, சத்தியம் நாடும் நல் ஆற்றலாக்கிக் கொள்ளும் படிப்பினையே அஹிம்சை'' என்றார்.

No comments:

Post a Comment