Thursday, October 31, 2013
இலங்கை::புலிகளினால் வடக்கில் இருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியமைக்கு வடக்குத் தமிழர்களும் பொறுப்புக் கூற வேண்டும். அன்று துப்பாக்கி முனையில் புலிகளினால் விரட்டப்பட்ட அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு இன்று வரை ஆதரவு கிடைக்கவில்லை.
விக்கினேஸ்வரனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நாடகமாடாது முஸ்லிம் மக்களின் நிலங்களை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரபாகரனால் முஸ்லிம் மக்கள் விரட்டப்பட்டு 23 வருடங்களாகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றினையும் மேற்கொள்ளவுள்ளோம் எனவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
செளசிரிபாயவில் நேற்று முன்தினம் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவ் அமைப்பினர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தனர்.
இது தொடர்பாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் குழுத் தலைவருமான மொஹமட் முசம்மில் கருத்துத் தெரிவிக்கையில்,
வடக்கில் இருந்த அப்பாவி முஸ்லிம் மக்கள் புலிகளினால் வெளியேற்றப்பட்டு 23 வருடங்களாகின்றது. அன்று ஆயுதமுணையில் அப்பாவி மக்களை வெறும் 500 ரூபாவுடன் விரட்டினர். முஸ்லிம் பெண்களையும் வயதானவர்களையும் அச்சுறுத்தி அவர்களின் சொத்துக்களை கொள்ளையடித்து ஒரு அராஜகமான செயலே அன்று பிரபாகரன் செய்தார். பின்னர் இலங்கை இராணுவத்தினர் அரசாங்கத்துடன் சேர்ந்து செய்துமுடித்த யுத்த வெற்றியோடு நாட்டில் இருந்த தீவிரவாதம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
எனினும் தற்போது வட மாகாண சபைத் தேர்தலின் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முஸ்லிம் மக்களை ஆதரிப்பதாக வாக்குறுதியளித்துள்ளனர்.
வடக்கில் மீண்டும் முஸ்லிம் மக்கள் வாழ்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை குழப்பும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் செயற்படக்கூடாது விக்கினேஸ்வரனும் சம்பந்தனும் பொய்யான கருத்துக்களை கூறி மக்களை ஏமாற்றாது குறித்த கால எல்லைக்குள் முஸ்லிம் மக்களை குடியமர்த்த வேண்டும்.
புலிகளினால் அபகரிக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் நிலங்களை மீண்டும் அம் மக்களுக்கே ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் உறுப்பினர் மெளலவி எம். எப். பாரூக் தெரிவிக்கையில்,
நாம் சகோதரத்துவத்துடன் இலங்கையில் அனைத்துப் பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றோம். இதே நிலைமை வடக்கிலும் ஏற்பட வேண்டும். இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் சிங்கள மக்களுடனேயே வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தாலும் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் நிம்மதியான வாழ்க்கையினை வாழவில்லை.
இன்று 20 ஆயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம் குடும்பங்கள் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதற்கு தமிழ் மக்கள் பெறுப்புக்கூற வேண்டும். இன்று வடக்கில் வாழும் தமிழர்கள் முஸ்லிம் மக்களை ஆதரித்து அவர்களின் இடங்களை ஒப்படைக்க அரசாங்கம் உதவி செய்ய வேண்டும். தமிழர் சிங்களவர்களைப் போல் முஸ்லிம் மக்கள் யுத்தத்தினை விரும்புவதில்லை அவர்கள் அனைத்து இனத்தவர்களும் இணைந்து அமைதியாக வாழ எப்போதும் நினைப்பவர்கள். இதனை வடக்கில் வாழும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எமக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளுக்காக நாம் தொடர்ந்தும் போராடுவோம். எமக்கு வடக்கு, கிழக்கு இணைப்பினை விடவும் முஸ்லிம் மக்களின் உரிமைகளே முக்கியமானது. அதை புரிந்து கொண்டு அரசாங்கமும் வடக்கின் கட்சிகளும் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் வடக்கில் இருந்து முஸ்லிம் மக்களை விரட்டிவிட்டமைக்கும் வடக்கில் மீண்டும் மக்களை குடியமர்த்த வேண்டும் என்பதனை வலியுறுத்தியும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினால் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவ் அமைப்பு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment