Wednesday, October 2, 2013

தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கை பிரகடனம் , முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவிடம் கையளிப்பு!.

Wednesday, October 02, 2013
இலங்கை::தேசிய சிறுவர் பாதுகாப்புக் கொள்கை பிரகடனம் நேற்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு நெலும் பொக்குன மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் நடைபெற்ற தேசிய நிகழ்வின் போதே இது வெளியிட்டு வைக்கப்பட்டது.
 
சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தலைமையில் நடைபெற்ற உலக சிறுவர் தின பிரதான நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட ஜனாதிபதியின் பாரியார் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவிடம் இதற்கான முதல் பிரதி கையளிக்கப்பட்டது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய சிறுவர் பாதுகாப்புக் கொள்கைக்கான நகல் வரைவை அதன் தலைவி அனோமா திஸாநாயக்கவினால் ஜனாதிபதியின் பாரியார் அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது.

43 பக்கங்களைக் கொண்ட இந்த நகல் வரைவில் சிறுவர்களுக்கான பாதுகாப்பு, வழிகாட்டல்கள், நலன்கள், சிறுவர்களும் குடும்பமும், சிறுவர் பெற்றோர் உறவுகள், உரிமைகளும் கடப்பாடும், புனர்வாழ்வு ஆலோசனை, கல்வி, ஆக்கத்திறன், வன்முறைகளிலிருந்து பாதுகாத்தல்,

சிறுவர்களுக்கு அனுகூலமான சட்ட நடைமுறை, சிறுவர் மீது தவறு இழைப்போர் தொடர்பான பதிவு, சிறுவர்களை தத்தெடுத்தல், அரவணைத்தல், சிறுவர் நலன்புரி நிலையங்கள், கண்காணித்தல், சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக கூட்டு பொறுப்பு, பயிற்சி மற்றும் அறிவுறுத்தல் போன்ற விடயங்கள் இந்த தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கை நகல் வரைவில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்தக் கொள்கையின் நகல் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் வெகுவிரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன , டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகத் துறை கண்காணிப்பு எம். பியுமான ஏ. எச். எம். அஸ்வர், பாராளுமன்ற உறுப்பினர்களான துமிந்த சில்வா, டொக்டர் சுதர்ஷனி  பெர்னாண்டோ புள்ளே, உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment