Wednesday, October 2, 2013

பாராளுமன்ற தேர்தலுக்கு முன் தே.மு.தி.க. கதை முடிந்து விடும்: நாஞ்சில் சம்பத் பேச்சு

Wednesday, October 02, 2013
சென்னை::திருக்கோவிலூர் ஒன்றிய அ.தி.மு.க சார்பில் அ.தி.முக. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருக்கோவிலூரில் நடை பெற்றது.
 
கூட்டத்திற்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் ஏ.வினாயகமூர்த்தி தலைமை தாங்கினார். திருக்கோவிலூர் ஒன்றியக்குழு தலைவர் அறிவழகன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
 
தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் ப.மோகன், தமிழக சர்க்கரை ஆணையத்தின் தலைவர் கே.ஜி.பி, ஞானமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அ.தி.மு.க கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:–
 
தமிழகத்தின் தன்னி கரில்லா முதல்வராக விளங்கிவரும் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியில் மக்கள் அனைத்து வகையிலும் நிறைவுற்று வாழ்கின்றனர். காரணம் ஏழை, எளிய மக்களின் வாழ்வு உயர்வதற்கு தேவையான அனைத்து திட்டங்களும் முதல்அமைச்சர் அறிவித்து அதனை வழங்கி வருகின்றார். இதனை பயன்பெறும் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
 
பாராளுமன்ற தேர்தலின் வெற்றிவிழா பொதுக்கூட்டமோ என்று நினைக்கின்ற அளவுக்கு மக்கள் கூடியுள்ளனர். காரணம் முதல் அமைச்சரின் சாதனைகளை மக்கள் கேட்க வந்த கூட்டம் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.
 
தே.மு.தி.க வினர் தங்களால்தான் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தது எனக் கூறினார்கள். அப்படியானால் சட்டமன்ற தேர்தலுக்கு பின் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் எங்கு போனீர்கள். உங்கள் நிலமை என்னவாயிற்று. இதுதான் தே.மு.தி.க வின் நிலை. அனேகமாக வரும் பாராளுமன்ற தேர்தலுக்குள் அந்த கட்சியின் நிலமை முடிந்துவிடும் என நினைக்கின்றேன்.
அதேபோல் தி.மு.க சந்திக்கும் கடைசி தேர்தல் இந்த பாராளுமன்ற தேர்தல்தான் என்பதையும் மக்கள் மனதில் கொள்ளவேண்டும். தமிழ் ஈழம் பற்றி கருணாநிதி பேச தகுதி கிடையாது. பதவியில் இருந்த காலத்தில் அமைதியாக இருந்துவிட்டு இப்போது டெசோ அமைப்பை வைத்துக் கொண்டு பேசுகின்றார்.
 
கருணாநிதிக்கு தைரியம் இருந்தால் டெசோ அமைப்பைக் கூட்டி அதில் ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி என்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அதனை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்
பாரா? எனக்கேட்கின்றேன். 2006–ம் ஆண்டு தமிழக மக்கள் செய்திட்ட பெருந்தவறு தி.மு.க வை ஆட்சிக் கட்டில் அமர்த்தியது.
 
ஒவ்வொரு நாட்டிலும் தவறு செய்யும் பிரமர்கள், அதிபர்கள் சர்வதேச நீதிமன்ற விசாரனைக்கு நிறுத்தப்பட்டு அதன்மூலம் தண்டனை பெற்று வருகின்றனர். அதேபோல் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தரவேண்டும். அதற்கு தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் ஆனால்தான் முடியும்.
 
பேரறிஞர் அண்ணா ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்றார். ஆனால் அதனையும் தாண்டி 20 கிலோ அரிசியை இலவசமாக தந்து நாட்டு மக்களின் வயிறு பசியை போக்கியவர் நமது முதல்வர் ஆவார்.
 
நாம் கேட்காமலே கொடுக்கும் முதல் அமைச்சருக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த ஆதரவினையும் அளித்து மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
 
மேற்கண்டவாறு நாஞ்சில் சம்பத் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். முடிவில் சந்தப்பேட்டை ஜெயக்குமார் நன்றி கூறினார்.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment