Monday, September 2, 2013

முஸ்லிம்கள் விடயத்தில் நவிப்பிள்ளையின் நீதி; TNA முஸ்லிம் வாக்குகளை சூறையாடுவதற்கான திட்டமா?: எல்.எஸ். ஹமீட்!

Monday, September 02, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக யாரும் பேச முன்வரவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பே முஸ்லிம்களின் பிரச்சினைகளை முன்வைத்தது என்று கூறியிருப்பது, முஸ்லிம்களை தி்ட்டமிட்டு திசை திருப்புகின்ற ஒரு நடவடிக்கையாகும் என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
“இந்த விடயம் முழுப்பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்கின்ற முயற்சியாகும். ஏனெனில், நவி்ப்பிள்ளை இலங்கை வருவதற்கு முன்பே இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் காரியாலயத்தை தொடர்பு கொண்டு எமது கட்சிக்கு நேரம் ஒதுக்கித்தருமாறு நாம் கேட்டபொழுது கட்சி ரீதியாக யாரையும் நவிப்பிள்ளை சந்திக்கவில்லை.என்றும் அதனால் நேரம் ஒதுக்க முடியாது என்றும் சிவில் சமூகப்பிரதி நிதிகளை மாத்திரமே அவர் சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வட கிழக்கில் அதிலும் குறிப்பாக வடக்கில் தமிழர்களைப் போன்று முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டடிருந்தார்கள் மட்டுமல்லாமல் 22 வருட காலம் அகதி வாழ்க்கை வாழ்ந்திருக்கின்றார்கள். எனவே அம்மக்களின் பிரதிநிதி என்ற வகையில் அமைச்சர் றிஷாட் பதியுதின் அவரைச் சந்திக்க வேண்டும் என்று தெரிவித்த பொழுது அவர்கள் அதற்கும் சம்மதிக்கவில்லை.
அவ்வாறு நேரம் வழங்க மறுத்து விட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு அரசியல் கட்சியாக இருந்த பொழுதும் அவர்களை மாத்திரம் சந்தித்ததற்கான பின்னணி எமக்குப் புரியவில்லை.

அமைச்சர் றவூப் ஹக்கீம் கூட நீதி அமைச்சர் என்ற முறையில்தான் சந்திக்கப்பட்டாரே ஒழிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் சந்திக்கப்படவிலலை. அதனால்தான் அவரும் “எல்லாம் நலமே” என்று கேட்டு தப்பித்துக்கொண்டார்.

அதேநேரம் சிவில் சமூகப்பிரதிநிதிகள் என்ற போர்வையில் திருகோணமலையில் வைத்து முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக மகஜர் கையளித்ததாக கூறுபவர்கள் வடக்கில் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை பல வழிகளில் தடுக்க முயன்றுகொண்டிருக்கின்ற தமிழ் தேசிய கூட்மைப்பில் போனஸ் ஆசனமும் அமைச்சுப் பதவியும் கிடைக்கும் என்ற நப்பாசையில் இணைந்து போட்டியிட்டுக் கொண்டு அவர்களை துதிபாடிக் கொண்டிருக்கின்றவர்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்நிலையில் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக பேசுவதற்கு முஸ்லிம்கள் யாரும் முன்வரவில்லை. என்று தெரிவிக்கப்பட்டிருப்பது முழுப்பூசனிக்காயை சோற்றுக்குள் மறைப்பது மாத்திரமல்ல, தமிழ் தேசிய கூட்டமைப்பினரே முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பேசினார்கள் என்ற ஒரு பிரச்சாரத்தைச் செய்து வட மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்களைத் திசை திருப்புவது இதன் உள்நோக்கமா ? என்றும் எண்ணத் தோன்றுகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment