Monday, September 30, 2013
இலங்கை::வட மாகாண சபையின் முதலமைச்சர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சீ. வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறிக்கும் இடையில் இன்று முதற் தடவையாக சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள வட மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு இந்த விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளது.
நடைபெற்று முடிந்த வட மாகாண சபைத் தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று முதலமைச்சர் பதவிக்கு தெரிவாகியுள்ள சீ. வி. விக்னேஸ்வரனுக்கான நியமனத்தை வழங்குமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா எம்.பி. வட மாகாண ஆளுநருக்கு கடந்த 23ம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தெரிவான உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் கடந்த 24ம் திகதி நள்ளிரவு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து வட மாகாண ஆளுநர் கடந்த 25ம் திகதி கையொப்பமிட்டு தனது பதில் கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.
வட மாகாண ஆளுநர் கடந்த 25ம் திகதி இந்தக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதுடன், இது தொடர்பில் சம்பிரதாய முறைப்படி கலந்துரையாடுவதற்காக தன்னை வந்து சந்திக்குமாறு அழைப்பும் விடுத்துள்ளதாகத் தெரிய வருகிறது.
இதற்கமையவே, இன்றைய இந்த சந்திப்பும் கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளன.
வட மாகாண முதலமைச்சர், மாகாண அமைச்சர்களின் நியமனங்கள், அமைச்சுப் பொறுப்புகள், பதவிப் பிரமாணம் போன்ற விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment