Saturday, August 31, 2013

நேபாள எல்லையில், கைது செய்யப்பட்ட, "இந்தியன் முஜாகிதீன்' அமைப்பின் பயங்கரவாதி, யாசின் பட்கல், பீகாரிலிருந்து, சிறப்பு விமானம் மூலம், டில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டான்!

Saturday, August 31, 2013
பாட்னா::இந்திய - நேபாள எல்லையில், நேற்று முன் தினம் கைது செய்யப்பட்ட, "இந்தியன் முஜாகிதீன்' அமைப்பின் பயங்கரவாதி, யாசின் பட்கல், பீகாரிலிருந்து, சிறப்பு விமானம் மூலம், நேற்று டில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.

40 குண்டு வெடிப்புகள் : மும்பை, ஐதராபாத், டில்லி மற்றும் புனே என, நாட்டில் நிகழ்ந்த, 40க்கும் மேற்பட்ட குண்டு வெடிப்புகளில் தொடர்புடையவனும், மத்திய அரசின் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெற்றிருந்தவனுமான, இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதி, யாசின் பட்கல், நேற்று முன் தினம், பீகார் மாநிலத்தில், நேபாள எல்லையை ஒட்டிய, நகர் சவுக் பகுதியில் கைது செய்யப்பட்டான்.
 
அவனுடன் அக்தர் என்ற மற்றொரு பயங்கரவாதியும் சிக்கினான். கைது செய்யப்பட்ட இருவரும், கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, பாட்னா அழைத்து வரப்பட்டனர். பாட்னா விமான நிலையம் அருகே, பீகார் மிலிட்டரி போலீஸ் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அவர்களிடம், தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, நேற்று மதியம் பலத்த பாதுகாப்புடன், இருவரும், சிறப்பு விமானத்தில், பாட்னாவிலிருந்து, டில்லிக்கு அழைத்து வரப்பட்டனர். பாட்னா விமான நிலையத்திற்கு பட்கலும், அவனது கூட்டாளி அக்தரும் அழைத்து வரப்பட்ட போது, "இருவருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும்' என, விமான நிலையத்திற்கு வெளியே கூடியிருந்த ஒரு பிரிவினர் கோஷமிட்டனர்.

12 நாள் போலீஸ் காவல் : யாசினும், அக்தரும் டில்லி வந்து சேர்ந்ததும், அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அவர்களை, 12 நாள் போலீஸ் காவலில் வைக்க, மாவட்ட நீதிபதி மேத்தா உத்தரவிட்டார். அப்போது, இருவரையும், பல்வேறு மாநிலங்களுக்கு அழைத்துச் சென்று, குண்டு வெடிப்புகள் தொடர்பாக விசாரணை நடத்த அனுமதி கோரி, தேசிய புலனாய்வு நிறுவனம் சார்பில், மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது; அதற்கும், நீதிபதி அனுமதி அளித்தார்.

No comments:

Post a Comment