Wednesday, July 3, 2013

நிலாவெளி தமிழ் பாடசாலையிலிருந்து முஸ்லிம் மாணவிகள் வெளியேற்றம்!

Wednesday, July 03, 2013
இலங்கை::இன்று புதன்கிழமை(03) நிலாவெளி தமிழ் மகாவித்தியாலத்தில் கல்வி பயிலும் முஸ்லீம் மாணவிகள் தமது பர்தா அணிந்து பாடசாலைக்குள் வரவேண்டாமென அதிபரால் வீதியில் நிறுத்திவைக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் இயல்புநிலை குழப்பமடைந்தது.
 
இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, குறித்தமாணவிகள் பாடசாலைக்கு வெளியே காலை சுமார் 09 மணிவரை தடுத்து நிறுத்தப்பட்டதை தொடர்ந்து அம்மாணவர்களுடைய பெற்றார்கள் உரிய இடத்திற்குச் சென்றதன் பின்னரே பதற்ற நிலை தோன்றியது.
 
இதனை அடுத்து குச்சவெளி பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி, கிழக்கு மாகாண சபை உறுப்பினரான அன்வர், பிரதேசசபை உறுப்பினரான ஜனா, சலாஹீதீன் மற்றும் வலயப்பணிப்பாளர் உட்பட பாசாலை அதிபர் பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வர எத்தணித்தனர்.
 
இதேவேளை சிலவிஷமிகளின் தூண்டுதலால் அப்பாடசாலை தமிழ் மாணவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வீதிக்கு இறங்கினர். பிரச்சினை முதலமைச்சர் செயலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கிழக்குமாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் விடுத்த பணிப்புரைக்கமைய மாகாணக்கல்விப் பணிப்பாளர் நிசாம், பொலிஸ் அத்தியட்சகர்கள் அடங்கிய குழு சம்பவவிடத்திற்கு விஜயம்செயதனர்.
அங்கு மாகாணகல்விப் பணிப்பாளர் நிசாமின் தலைமையில் அவசர கூட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டது.
 
இதில் மாகணசபை உறுப்பினர் அன்வர், ஜனாரத்தனன், குச்சவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி யாப்பா, பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பிரதேசசபை உறுப்பினரகள், வலயக்கல்விப்பணிப்பாளர் மற்றும் பாடசாலை அதிபர், பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றார்கள், இருசமூகத்தை சார்ந்த முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
 
இதன்போது, பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச்சங்கம், தமிழ் சமூகத்தைச்சார்ந்த பெற்றார்கள் அனைவரும் ஒருமித்து  தமது கலாச்சாரத்தை இந்த பர்தா அழித்துவிடும் எனக்குறிப்பிட்டதுடன், பெரும்பாண்மையாக உள்ள மாணவர்களைப் போன்று தமிழ் கலாச்சாரத்தையே இப்பாடசாலையில பின்பற்றவேண்டும் எனவும் ஒருமித்த கருத்தை தெரிவித்தனர்.
 
இதனைத்தொடர்ந்து முஸ்லிம் மாணவர்களுடைய பெற்றார்கள், இது கலவன் பாடசாலை என்பதால் தமது வயது வந்த உயர்தரம் பயிலும் பிள்ளைகள் பர்தா அணியவது அவசியம் என்று குறிப்பிட்டதுடன்,
 
தமது பிள்ளைகள் தொடர்ந்தும் இப்பாடசாலையில் கல்வி கற்பார்களாயின் இவர்கள் உளரீதியாக பாதிப்படைவார்கள் எனவும், இது ஒரு திட்டமிட்ட செயல்பாடாகவே பார்க்கின்றோம் என்றும் குறிப்பிட்டனர்.
 
இதனால் தமது 93 முஸ்லிம் பிள்ளைகளையும் அருகாமையிலுள்ள அல்-பதா வித்தியாலயத்திற்கு இடம் மாற்றுவதற்கு  மாகாண கல்விப்பணிப்பாளரிடம் கோரிக்கைவிடுத்தனர்.
 
இதனையடுத்து மாகாணக்கல்விப் பணிப்பாளர் முதலமைச்சருடன் கலந்துரையாடி குறித்த மாணவர்களை இணைப்பதற்க்கான சகல வசதிகளையும் அல்-பதா வித்தியாலயத்தில் ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தார்.
 
அதேவேளை குச்சவெளி பிரதேசத்திலுள்ள ஏனைய முஸ்லிம் பாடசாலையில் கல்வி பயிலும் தமிழ் மாணவிகளின் தமிழ் கலாச்சாரம் சிறந்த முறையில் பேணப்பட்டு வருகின்றமையை பெற்றோர்கள் சுட்டிக்காட்டினர். 
 
அதுமட்டுமல்லாது கடந்த இருவாரங்களுக்கு முன் பாடசாலைக்கு அருகாமையிலுள்ள பிரதேச சபைக்குச் சொந்தமான பொதுவிளையாட்டு மைதானத்தை தமது பாடசாலைக்கு பெற்றுத்தருமாறு மாணவர்களை வீதியில் நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுப்பட்டவேளை பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment